- சதீஷ் லெட்சுமணன்
தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள புதிய 1,600 மெகாவாட் நிலக்கரி மின் நிலையத்தின் மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மின் ஆதாரங்களுடன் ஒப்பிடுகையில் விலை உயர்ந்ததாக இருக்கும் என Climate Risk Horizon – (CRH) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மின்கட்டணச் செலவுகள் உயர்ந்து வரும் நிலையிலும், மாநில மின்துறையின் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ள நிலையிலும், புதிய நிலக்கரி மின் நிலையங்களை அமைப்பது மின்சாரத்தின் விலையை மேலும் உயர்த்தும் என்று கிளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் (CRH) நடத்திய புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
புதிய நிலக்கரி அனல்மின் நிலையங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய தூத்துக்குடியில் இரண்டு புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்கள் பொது – தனியார் – கூட்டாண்மை முறையில் ரூ. 20,800 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று ஆகஸ்ட் 31ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தூத்துக்குடியில் தற்போது 210 மெகாவாட் திறன்கொண்ட ஐந்து நிலக்கரி அடிப்படையிலான மின்னுற்பத்தி அலகுகள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவுதிறன் 1050 மெகாவாட் ஆகும். இவை 1979ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அலகுகள் நீண்டகாலம் செயல்பட்டு வருவதால் அவற்றை படிப்படியாக செயலிழக்கம் செய்து தலா 800 மெகாவாட் கொண்ட இரண்டு அலகுகளை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட உள்ள அனல் மின் நிலையத்தின் 2ம் மற்றும் 3ம் கட்ட விரிவாக்க பணிகளில், மின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த 660 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி அலகுகளுக்கு பதிலாக, 800 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, உடன்குடி அனல் மின் நிலையத்தின் 2ம் கட்டத்தில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளும், 3ம் கட்டத்தில் 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளும் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மொத்தம் 3,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த இரு கட்டங்களிலும் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தன.
மேலும், உப்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனல்மின் நிலையங்களிl மீண்டும் பணிகள் தொடங்கப்படும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருந்தார்.
நிலக்கரி அனல்மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ. 10.40
தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள 2×800 மெகாவாட் மிக உய்ய அனல்மின் நிலையத்தின் மின்சாரம், 8 மணி நேர பேட்டரி சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தை (Solar PV) விட ஏறக்குறைய இருமடங்கு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று CRH-இன் மதிப்பீடுகள் காட்டுகின்றன.
ஆய்வின்படி, ஆலையின் செயல்பாட்டு அளவைப் (plant utilisation) பொறுத்து, புதிய அனல்மின் நிலையங்களின் மின்சார உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ.8.75 முதல் ரூ.10.40 வரை இருக்கும். இதற்கு மாறாக, அதே அளவு மின் உற்பத்தியை 8 மணி நேர பேட்டரி சேமிப்புடன் இணைந்த சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் பெற்றால், ஒரு யூனிட்டுக்கு ரூ.5 மட்டுமே செலவாகும். சூரிய மின்னாற்றல் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 18 மணி நேரத்தைப் பூர்த்தி செய்யும். குறைந்த மின்சாரத் தேவை உள்ள மீதமுள்ள 6 மணி நேரத்தை, ஏற்கனவே உள்ள மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் ஈடுசெய்யலாம்.

அக்டோபர் மாதத்தில், தமிழ்நாடு ஒரு யூனிட்டுக்கு ரூ.37 என்ற விலையில் மின்சாரத்தை வாங்கியது. இது இந்தியாவிலேயே மிக அதிக விலையிலான மின் கொள்முதல்களில் ஒன்றாகும். மின்கட்டணச் செலவுகள் உயர்ந்து வரும் நிலையிலும், மாநில மின்துறையின் கடன் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ள நிலையிலும், புதிய நிலக்கரி மின் நிலையங்களை அமைப்பது மின்சாரத்தின் விலையை மேலும் உயர்த்தும் என்றும் புதிய அனல்மின் நிலையங்களை பொது – தனியார் கூட்டாண்மை முறையில் நிறுவினால்கூட மின்சாரத்தின் அதிகப்படியான விலை மின்கட்டண உயர்வாக நுகர்வோரைப் பாதிக்கும் என்றும் கிளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் (CRH) நடத்திய புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
சூரிய மின்னுற்பத்தித் திட்டத்தின் பலன்கள்
தூத்துக்குடியில் திட்டமிடப்பட்டுள்ள 1,600 மெகாவாட் நிலக்கரி மின்சாரத்திற்குப் பதிலாக, 9,067 MWh பேட்டரி சேமிப்புடன் கூடிய 3,490 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தலாம் என CRH வலியுறுத்துகிறது. இதற்கு மொத்த மூலதனச் செலவு (CapEx) ரூ.27,289 கோடி தேவைப்படும். தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள 1,600 மெகாவாட் நிலக்கரி மின் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள மூலதனச் செலவு ரூ.20,800 கோடி. சூரிய ஒளி + BESS திட்டத்திற்கு ஆகும் கூடுதல் மூலதனச் செலவு (ரூ.6,489 கோடி), புதிய நிலக்கரி மின் நிலையத்தோடு ஒப்பிடுகையில் குறைவான மின்சார விலையால் கிடைக்கும் சேமிப்பின் மூலம் இரண்டாவது ஆண்டிலேயே இந்த 6,489 கோடியை ஈடுசெய்யலாம். ஒட்டுமொத்தப் பார்த்தால் சூரிய ஒளி + BESS-ஐத் தேர்ந்தெடுப்பது மாநிலத்தின் பொருளாதாரத்துக்கும் சாதாரண நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க சேமிப்பை அளிக்கும். மதிப்பீடுகளின்படி, சூரிய ஒளி + BESS மூலம் கிடைக்கும் குறைந்த மின் செலவு, பயன்பாட்டு அளவைப் பொறுத்து, முதல் ஆண்டிலேயே தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.3,372 கோடியை மிச்சப்படுத்த உதவும் என CRH அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய ஒன்றிய எரிசக்தி அமைச்சகத்தின் (Viability Gap Funding – VGF) திட்டத்தை BESS நிறுவலுக்கு ஆதரவாக தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 1,500 MWh BESS ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய நிலக்கரி மின் நிலையங்களுக்குப் பதிலாக தூய்மையான புதுப்பிக்கத்த மின்சார உற்பத்தி முறையைப் பயன்படுத்துவது, ஏற்கனவே தொழிற்சாலைக் காற்று மாசு மற்றும் கழிவுகளால் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைக் கண்டுள்ள தூத்துக்குடிப் பகுதியில் மாசுபாட்டையும் தடுக்கும்.
“தமிழ்நாடு இருக்கும் பொருளாதாரச் சூழலையும், சூரிய ஒளி மின்சாரம் மற்றும் பேட்டரி சேமிப்பின் தெளிவான நிதி நன்மைகளையும் கருத்தில் கொண்டால், மின்தேவை அதிகரிப்பைப் பூர்த்தி செய்ய புதிய நிலக்கரி மின் நிலையங்களைக் கட்டுவது பொருளாதார அடிப்படையில் எந்த அர்த்தமும் இல்லாதது. மாநிலத்தின் குறைந்த நிதி ஆதாரங்களை, பேட்டரி சேமிப்புடன் இணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கப் பயன்படுத்துவதே சிறந்தது” என்று கிளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் இயக்குநரும் ஆய்வின் இணை ஆசிரியருமான ஆஷிஷ் பெர்னாண்டஸ் கூறினார்.
தமிழ்நாட்டின் காலநிலை இலக்குகளைப் பாதிக்கும் புதிய அனல் மின் நிலையங்கள்
தமிழ் நாடு இனி புதிய நிலக்கரி அனல் மின் நிலையங்களை உருவாக்காது என்று தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் மின் வாரியம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. மேலும் புதுப்பிக்கத்த ஆற்றல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழகமும் (TNGECL) உருவாக்கப்பட்டது. 2031ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் மொத்த எரிசக்தி நுகர்வில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறுவதையும் 70% கார்பன் உமிழ்வைக் குறைப்பதையும் இலக்காகத் தனது கொள்கை விளக்கக் குறிப்பிலும் தி.மு.க. அரசு கூறியிருந்தது. தமிழ் நாடு அரசு கடந்த 5 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலவற்றுக்கும் புதிய நிலக்கரி அனல்மின் நிலைய அறிவிப்புகள் முரணாக அமைந்துள்ளது.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தத் தீவிர முயற்சிகள் தேவை
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) 2026ஆம் ஆண்டுக்கான உமிழ்வு இடைவெளி அறிக்கை The Point of Return எனும் பெயரில் நேற்று வெளியாகியது. புவி வெப்பநிலையை தொழிற்புரட்சிக்கு முன்பு நிலவிய சராசரி வெப்பநிலையை விட 1.5°C-க்குக் மேல் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காகும். ஆனால், இவ்வாய்ப்பு இப்போது இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை மேற்கொள்ளாமல் தற்போதைய கொள்கைகள் தொடர்ந்தால், 2100-க்குள் வெப்பமயமாதல் 2.8°C-ஆக (66% வாய்ப்புடன்)அதிகரிக்கும்; அனைத்து தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளும் (NDCs) நிறைவேற்றப்பட்டு, அதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்தால்கூட, வெப்பமயமாதல் 2.6°C-ஆக மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என UNEP அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டே புவியின் சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய சராசரியுடன் ஒப்பிடுகையில் தற்காலிகமாக 1.5°C-ஐ எட்டியது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம்தான் இதுவரை பதிவானதில் இரண்டாவது அதிக வெப்பநிலை பதிவான செப்டம்பர் மாதமாகும். அம்மாதத்தில் உலகளாவிய சராசரி வெப்பநிலையானது 16.27°C ஆகும். இது 1991 மற்றும் 2020 இடையேயான காலத்தின் சராசரியுடன் ஒப்பிடுகையில் 0.82°Cயும் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் 1.63°Cயும் அதிகமாகும்.
இந்த அளவு வெப்பநிலை உயர்வுக்கே பெருமழை, வறட்சி, வெள்ளம், பனிப்பரப்புகள் உருகுதல், கடல்மட்ட உயர்வு, உயிர்ப்பன்மைய அழிவு, காடுடுத் தீ என பெரும் பாதிப்புகளை உலகம் எதிர்கொண்டு வருகிறது. நிரந்தரமாக 1.5°C அளவுக்குப் புவி வெப்பநிலை உயர்ந்தால் அதன் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் போகும்.
காலநிலை மாற்றத்தின் கோரமான விளைவுகளை உலகம் எதிர்கொள்ளத் திணறி வரும் நிலையில் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றான நிலக்கரி அனல்மின் நிலையங்களைப் புதிதாக அறிவித்து வரும் த.வெ.க. அரசு தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.
கட்டுரையாளர்

தமிழ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், காடுகள், உயிர்ப்பன்மையம் குறித்து எழுதி வருகிறார்.. நியூஸ் 18 தமிழ் நாடு தொலைகாட்சியில் 5 ஆண்டுகள் பணியாற்றிய இவர் தற்போது சுயாதீன பத்திரிகையாளராக விகடன், The Wire போன்ற செய்தித் தளங்களில் எழுதி வருகிறார்.
