முதல்வர் விஜய் அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு ஆளும் தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை கடந்த 19-ந் தேதி அரசு ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றிக்கையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973 விதி 12 (Rule 12) –ன் படி:
- அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ (செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மீம்ஸ் (Memes) போன்றவை) அல்லது பொதுக்கூட்டங்களிலோ பகிரங்கமாக விமர்சிக்கக் கூடாது.
- பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான கருத்துக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.
- அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது.
எனவே, இத்துறையில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மேற்கண்ட விதிமுறைகளைத் தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎம் கண்டனம்
இதற்கு சிபிஎம் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் தமது எக்ஸ் பக்கத்தில், “என்னங்க சார் உங்க சட்டம்? அரசு ஊழியர்களே இதைக் கிழித்தெறிந்து பறக்கவிடுங்க பட்டம்!
அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகளை விமர்சித்தால் நடவடிக்கை எடுப்பார்களாம்.. ஒப்பந்தம்,தனியார்மயம்,ஓய்வூதிக்குறைப்பு ,காலிப்பணியிடம் நிரப்ப மறுப்பு எதையுமே விமர்சிக்க கூடாதென்றால் சர்வாதிகாரமில்லையா?” என தெரிவித்துள்ளார்.
