காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சீமானும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் பிரபுவும் ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்திய புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் பல் மருத்துவர் பிரபு களம் காண்கிறார்.
கடந்த ஒரு மாதமாக அனல் பறக்க பிரச்சாரம் நடந்தது. இதில் சீமானும் சாட்டை துரைமுருகனும் தமிழக வெற்றி கழகத்தை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சோழிங்கநல்லூரில் தனது வாக்கை பதிவு செய்த சீமான் உடனடியாக புறப்பட்டு தனது தொகுதியான காரைக்குடிக்கு சென்றார்.
அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று பார்த்து வந்த நிலையில், ஒரு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வரும்போது எதிரே அவரை எதிர்த்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் பிரபுவும் வந்தார்.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.
இந்த சந்திப்பின் போது, “வெற்றி பெற வாழ்த்துகள் தம்பி” என்று சீமான் வாழ்த்தியதும், அதற்கு பிரபு காட்டிய மரியாதையும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, வேட்பாளர்கள் சகஜமாகப் பழகுவது ஒரு முதிர்ச்சியான ஜனநாயகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
