பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? – சீமான் கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

பரந்தூரில் பசுமை வழி விமான நிலையத்திற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு புதிய தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதா என திமுக எம்பி பி.வில்சனின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணை மந்திரி முரளிதர் மோஹோல் இல்லை என்று பதில் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 24 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை ஒன்றிய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெக அரசு, பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் வானூர்தி நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய வானூர்தி போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் பரந்தூரிலிருந்து வானூர்தி நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது, பரந்தூர் புதிய வானூர்தி நிலைய விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ADVERTISEMENT

பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால் இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை ஒன்றிய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றதாவது முதல்வர் விஜய் அவர்களுக்கு நினைவிருக்கிறதா அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன?

ஆகவே, பரந்தூர் புதிய வானூர்தி நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share