“அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. இந்நிலையில் நெல்லையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் “அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன். என்னைப் பார்த்து தவெகவினர் பயப்படுகின்றனர். எல்லா சாதிக்குமான பொது வேட்பாளர் நான். தமிழ்நாட்டில் சொந்த பந்தம் என்று பார்த்தால் எந்தத் தொகுதியிலும் போட்டியிட முடியாது. அரசியல் நிலைப்பாடுகள் என்பது வேறு, உறவுகள் என்பது வேறு. நான் எப்போதுமே பொது வேட்பாளர்தான்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதனால் அம்பாசமுத்திரம் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் சீமான் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
