கோவா திரைப்பட விழாவில் இப்படியும் ஒரு ஆவணப்படம்.. வேதங்களில் கூறப்படும் சரஸ்வதி நதியைத் தேடி!

By Mathi

|

Published on 27 Nov 2026, 8:13 AM

Goa Film Festival Saraswati

வேதங்களிலும் இந்து மத நூல்களிலும் குறிப்பிடப்படும் சரஸ்வதி நதி தொடர்பான அறிவியல் ஆய்வுகளை முன்வைக்கும் இந்தி ஆவணப்படம், கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் (IFFI 2026) இந்தியன் பனோரமா பிரிவில் ‘தி அன்சீன் ஹோலி ரிவர் – சரஸ்வதி’ (The Unseen Holy River – Saraswati) என்ற ஆவணப்படம் நேற்று (நவம்பர் 26) திரையிடப்பட்டது.

ADVERTISEMENT

பண்டைய புவியியல் குறிப்புகள், புவியியல் ஆய்வுகள் மற்றும் சரஸ்வதி நதியின் இருப்பு தொடர்பாக டாக்டர் சுபாஷ் சி. சிங் மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி நதிக்கரையில் வேதங்கள்?

ADVERTISEMENT

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவணப்படத்தின் இயக்குநர் பாஸ்கர் விஸ்வநாதன், தயாரிப்பாளர் அபினவ் எம். ஜெயின் ஆகியோர் பங்கேற்றனர்.

இயக்குநர் பாஸ்கர் விஸ்வநாதன் கூறுகையில், சரஸ்வதி நதி குறித்த மர்மம் தம்மையும் கவர்ந்ததாகவும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளே தமது முதல் ஆவணப்படத்தை உருவாக்குவதற்கு உத்வேகம் அளித்ததாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

சாரஸ்வத நாகரிகம், பண்டைய வேத மரபு ஆகியவற்றுடன் சரஸ்வதி நதிக்கு உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த நதியின் கரையில்தான் வேதங்கள் இயற்றப்பட்டதாக நம்பப்படுவதையும் குறிப்பிட்டார்.

விரிவான ஆய்வுத் தகவல்களை அதன் அடிப்படைத் தன்மை மாறாமல் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் காட்சிப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் பாஸ்கர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

கும்பமேளாவில் எழுந்த கேள்வி

ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் அபினவ் எம். ஜெயின் கூறுகையில், பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்குச் சென்றபோது திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை ஆகிய 2 நதிகளை மட்டுமே தம்மால் காண முடிந்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து வேதங்களிலும் இதர இந்து மத நூல்களிலும் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் மூன்றாவது நதியான சரஸ்வதி குறித்து ஆராயும் ஆர்வம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தேசிய நீரியல் நிறுவனம் மேற்கொண்ட ஐசோடோப்பு ஆய்வுகள் குறித்தும் அபினவ் எம். ஜெயின் விவரித்தார். நீர் மாதிரிகளைப் பரிசோதித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள், நிலத்தடி நீர் வலையமைப்பு தொடர்பான ஆராய்ச்சிகளுக்குப் பங்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புவியியல் ஆய்வுகள், பண்டைய மரபுகள், நவீன திரைப்பட உருவாக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து சரஸ்வதி நதி தொடர்பான தேடலை அறிவியல் பார்வையில் இந்த ஆவணப்படம் முன்வைப்பதாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel