டிஜிட்டல் திண்ணை: பங்கு பிரிக்கப்பட்ட ‘மணல் ஏலம்’- அப்பா – மகன் மோதலால் குழப்பத்தில் எடப்பாடி!

Published On:

| By Minnambalam Desk

Sand auction with divided shares edappadi

வைஃபை ஆன் செய்ததும் மணல் விவகாரத்தில் சுமூக ‘ஏலம்’, பாமகவில் அப்பா – மகன் பஞ்சாயத்தால் பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிசாமி என வாசித்தபடியே மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப். Sand auction with divided shares edappadi

உச்சநீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் திறக்கப்படுவதால் மணல், கிராவல், சவுடு ஆகியவற்றின் ஏலம்தான் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது.

ADVERTISEMENT

புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோர் மணல், சவுடு, கிராவல் ஏலம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இவர்களுடன் ராஜப்பா மற்றும் பொன்னர் சங்கர் ஆகியோரும் மணல் ஏலப் போட்டியில் இறங்கினர்.

தற்போது மணல் ஏல விவகாரத்தில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுவிட்டதாம். அதாவது தமிழ்நாடு முழுவதும் புதுக்கோட்டை ராமச்சந்திரனுக்கு மணல் எடுக்க ஏலம் வழங்கப்பட்டுள்ளதாம். கிராவலைப் பொறுத்தவரையில் ராஜப்பா மற்றும் திண்டுக்கல் ரத்தினம் ஆகியோருக்கு கூட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மட்டும் பொன்னர் சங்கருக்கு மணல், கிராவல் ஏலம் தரப்பட்டுள்ளதாம்.

ADVERTISEMENT

சரி பாமகவில் அப்பா- மகன் சண்டையால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நெருக்கடியாம்?

பாமகவில் மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை கொட்டி வருகிறார் அப்பா ராமதாஸ். இதன் தொடர்ச்சியாக இன்று ஜூன் 13-ந் தேதி தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமது மூச்சு நிற்கும் வரை தாமே பாமகவின் தலைவர் என உறுதிபட அறிவித்தார். பாமகவின் கூட்டணி குறித்தும் தாமே முடிவெடுப்பேன் என்றும் திட்டவட்டமாக ராமதாஸ் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு, கூட்டணி குறித்து அன்புமணியிடம் பேசக் கூடாது. ராமதாஸிடம் மட்டுமே பேச வேண்டும் என சொல்லிவிடுமாறு ஜிகே மணிக்கு உத்தரவிட்டாராம் டாக்டர்.

இதனால் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசிய ஜிகே மணி, கூட்டணி தொடர்பாக சின்னய்யாவிடம் பேச வேண்டாம். தம்மிடம் மட்டும்தான் பேச வேண்டும் என அய்யா சொல்ல சொன்னார் என கூறியிருக்கிறார். இதற்கு உறுதியான பதில் எதுவும் சொல்லாமல், ஜிகே மணியின் தகவலை மட்டும் கேட்டுக் கொண்டாராம் எடப்பாடி பழனிசாமி.

சரி.. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி சிக்கல் வருமாம்?

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை ராமதாஸ் நடத்தினார். இதற்கான டீலிங்குகளை ராமதாஸ் மகள் காந்தியும் அவரது கணவர் பரசுராமனும் கையாண்டிருந்தனர்.

ஆனால், அன்புமணியும் அவரது மனைவி சவுமியாவும் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து வந்து பாமக – பாஜக கூட்டணியை உறுதி செய்தனர்.

இதனால் அதிமுக – பாமக கூட்டணி அப்போது உருவாகவில்லை. அப்போது அதிமுகவுக்கு இது மிகப் பெரும் ஏமாற்றமாகவும் பின்னடைவாகவும் இருந்தது. எடப்பாடி பழனிசாமியும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

இப்போது அதிமுக கைகோர்த்துள்ள பாஜகவுடன் இணைந்து அன்புமணி கூட்டணி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ராமதாஸோ அதிமுகவின் மூலமாகவே கூட்டணி முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இதனால் யாருடன் தொடர்பு கொண்டு பேசுவது என்கிற குழப்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப். Sand auction with divided shares edappadi

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share