ஆட்டோ, கார் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முழு இலாபத்தையும் அளிக்கும் வகையில் ’சஹ்கார் டாக்ஸி’ சேவை திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. sahkar taxi will introduce soon – amit shah
இந்தியாவில் இன்று ஓலா மற்றும் உபேர் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து நாடு முழுவதும் பிரபலமாகி உள்ளது. இருந்தே இடத்தில் இருந்தே செல்ல வேண்டிய இடத்திற்கு செல்போனில் ஆப் மூலம் புக் செய்து குறைவான கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள வழி செய்கிறது.
நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் இவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஓலா 250-க்கும் மேற்பட்ட நகரங்களிலும், உபர் 125-க்கும் மேற்பட்ட நகரங்களிலும் சேவை வழங்கி வருகின்றன.
அதே வேளையில் அலுவலகத்திற்கு செல்லும் நேரங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கட்டண உயர்வு, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் மொபைல் வகையை பொறுத்து கட்டண வேறுபாடு என வாடிக்கையாளர் மத்தியில் குற்றச்சாட்டுகள் உள்ளன.
அதே போன்று, ஓட்டுநர்களிடம் இருந்து அதிக கமிஷன் பறிப்பு, பணி பாதுகாப்பின்மை, உள்ளூர் ஆட்டோ, கார் ஓட்டுநர்களின் தொழில் பாதிப்பு என ஓட்டுநர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுகிறது.
இந்த நிலையில் தான் ஓட்டுநர்களுக்கு நேரடி லாபம் ஈட்ட வழிவகுக்கும் வகையில், “கூட்டுறவு அடிப்படையிலான ‘சஹ்கார் டாக்ஸி’ சேவையை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மார்ச் 27) நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் அறிமுகம்! sahkar taxi will introduce soon – amit shah
மேலும் அவர், “சஹ்கார் டாக்ஸி மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் ‘சஹர் சே சம்ரிதி’ (ஒத்துழைப்பு மூலம் செழிப்பு) என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது. இது வெறும் முழக்கம் அல்ல. இதை களத்தில் செயல்படுத்த கூட்டுறவு அமைச்சகம் மூன்றரை ஆண்டுகளாக அயராது உழைத்து வருகிறது. அடுத்த சில மாதங்களில், ஓட்டுநர்களுக்கு நேரடி லாப ஓட்டத்தை உறுதி செய்யும் கூட்டுறவு அடிப்படையில் ’சஹ்கார் டாக்ஸி’ சேவை தொடங்கப்படும்,” என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஒரு பயனர் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு சாதனம் மூலம் முன்பதிவு செய்கிறாரா என்பதைப் பொறுத்து ஓலா, உபேர் சவாரி கட்டணங்கள் மாறுபடுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) சமீபத்தில் இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் ஓலா, உபேருக்கு போட்டியாக மத்திய அரசு ’சஹ்கார் டாக்ஸி’ சேவை திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.