ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருளாகப் பார்க்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி, இன்றைய அவசர உலகில் நமது அன்றாட அத்தியாவசிய மின்சார சாதனங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
பெண்கள் மட்டுமே சமையலறையைக் கவனித்து வந்த நிலை மாறி, தற்போது இளைஞர்களும், ஆண்களும் சமையலை நோக்கி நகர்வது ஒரு ஆரோக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. பல ஆண்களும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் சமையல் வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு வீட்டில் ஆண், பெண் இருவருமே சமையலறை நோக்கி நகர்ந்தாலும், இன்றைய வேகமான உலகில் ஃப்ரிட்ஜ் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது என்பது பெரும் சவாலான காரியமே. ஃப்ரிட்ஜைப் பயன்படுத்தவே கூடாது என்று பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையிலும், தற்போது அதன் பயன்பாடு பரவலாக அதிகரித்துவிட்டது.
எனவே, ‘ஃப்ரிட்ஜ் பயன்பாடு நல்லதா, கெட்டதா?’ என்பதை விட, அதை எப்படிப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
சூடான உணவை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
மனிதர்கள் நேரத்தைச் சேமிப்பதற்காகவும், உணவு கெட்டுப்போவதைத் தடுப்பதற்காகவும் மீதமான உணவை ஃப்ரிட்ஜில் வைக்கின்றனர். ஆனால், சூடான உணவை எப்போதும் அப்படியே ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
சூடான உணவை நேரடியாக வைக்கும்போது அது நஞ்சாகும் அபாயம் இருப்பதுடன், ஃப்ரிட்ஜின் கம்ப்ரசருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
மேலும், ஃப்ரிட்ஜில் உள்ள மற்ற உணவுகளின் வெப்பநிலையையும் இது பாதிக்கும். எனவே, சமைத்த உணவை சுமார் அரை மணி நேரம் வெளியே வைத்து, அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்த பிறகு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அதே சமயம் நாம் சமைத்த உணவை 2 மணி நேரத்திற்குள் ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது.
கோடை காலங்களிலோ அல்லது வெப்பம் அதிகம் இருக்கும் நேரங்களிலோ சமைத்த உணவை சுமார் 1 மணி நேரத்திற்குள் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்.
உணவுகளைக் காற்றுப்புகாத தனித்தனி கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களில் அடைத்து வைப்பதன் மூலம், மற்ற உணவுகள் பாதிக்கப்படுவதையும் துர்நாற்றம் வீசுவதையும் தவிர்க்கலாம். பிளாஸ்டிக் கன்டெய்னர்களைப் பயன்படுத்தும் போது அதன் தரத்தில் கவனமாக இருப்பது முக்கியம்.
ஃப்ரிட்ஜில் வைக்கும் உணவுகளை 3 முதல் 4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு மேல் சேமிக்க விரும்பினால், அதை ஃப்ரீசரில் வைப்பது பாக்டீரியா தொற்றைத் தவிர்க்க உதவும்.
அசைவ உணவுகளைப் பராமரிக்கும் முறை:
சிக்கன், மீன், மட்டன் போன்ற அசைவ உணவுகளில் மசாலாப் பொருட்களைத் தடவி ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் இன்று பரவலாகப் பலரிடம் உள்ளது. அப்படி வைக்கும் போது, ஒரே பாத்திரத்தில் மொத்தமாக அடைத்து வைக்காமல், ஒவ்வொரு முறை சமைப்பதற்கு ஏற்ற அளவுகளில் தனித்தனி டப்பாக்களில் வைத்து ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.
ஃப்ரீசரில் உறைந்துள்ள அசைவ உணவை எடுத்து, நேரடியாக அப்படியே சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு, இரவில் சமைக்க வேண்டும் என்றால், பிற்பகலிலேயே அதை ஃப்ரீசரில் இருந்து எடுத்து ஃப்ரிட்ஜின் கீழ் பகுதிக்கு மாற்ற வேண்டும். பின்னர், சமைப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியே எடுத்து வைத்துச் சமைப்பது சரியாக இருக்கும்.
சிலர் 10 முதல் 15 நாட்கள் வரை இட்லி மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கின்றனர். இது உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
கூடுதல் குறிப்புகள்:
பூக்கள் போன்ற அதிக வாசனையுள்ள பொருட்களைத் தனி பாத்திரத்தில் மூடி வைப்பதன் மூலம், மற்ற உணவுகளில் அந்த வாசனை கலப்பதைத் தவிர்க்கலாம்.
ஃப்ரிட்ஜில் ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக நிபுணர்களை அணுகி சரிசெய்வது உணவின் தரத்தைப் பாதுகாக்க உதவும்.
