இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட மூன்று பெண்களில் ஒருவர் அதிக எடையுடன் அல்லது உடல் பருமனுடன் இருப்பதாக மத்திய அரசு தரவுகள் கூறுகின்றன.
தேசிய சுகாதார கணக்கெடுப்பின்படி ,2019-21 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 24 சதவிகிதமாக இருந்த 15 முதல் 49 வயதுடைய உடல் பருமன் பெண்களின் விகிதம் 2023 -24 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 30.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதே வயது பிரிவை சேர்ந்த ஆண்களிடையே இந்த விகிதம் 22.9 சதவிகிதத்திலிருந்து 27.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உடல் பருமன் என்பது கருத்தரித்தலில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
எனவே கணவன் மனைவி இருவருமே தங்களை உடல் நல சிக்கல்களை கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இது தம்பதிகளின் கருவுறும் திறனை மேம்படுத்துவதோடு, தாய் சேய் ஆரோக்கியமும் நன்றாக இருக்க உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த கோட்பாடு ஆயுர்வேதத்திற்கு புதிது அல்ல. குழந்தை பெறுவதற்கு முன்பாக தம்பதிகள் உடல் அளவிலும் மனதளவிலும் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘கர்ப்பதான சம்ஸ்காரம் ‘ எனும் கருத்தரிப்பிற்கு முந்தைய வழிமுறையை ஆயுர்வேத பாரம்பரிய முறை தெளிவுப்படுத்துகிறது.
இந்த நடைமுறை இப்போது கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள எஸ்டிஎம் ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
”இங்கு தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தம்பதிகளுக்கு கருத்தரிப்பிற்கு முன்பு ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்று அந்த மையத்தின் முதல்வரும் மூத்த மகப்பேறு மருத்துவருமான மமதா கே வி கூறியுள்ளார். (தகவல் : தி இந்து)
இந்த அணுகுமுறையை கருத்தரிப்புக்கான விழிப்புணர்வு என்று விவரிக்கும் மருத்துவர் மமதா, இந்த செயல்பாட்டில் கணவன் மனைவி இருவரின் உடல் நல பரிசோதனை, அவர்களது ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் பிற காரணிகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.
கர்ப்பம் ஆவதற்கு முன்பே மேற்கொள்ளப்படும் இந்த ஆலோசனைகள் உடலில் இருக்கும் நச்சுக்களை கண்டறிந்து வெளியேற்ற உதவும். ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பளிக்கும்” என்றும் கூறியுள்ளார்.
”ரிது, ஷேக்த்ரா, பீஜா, அம்பு ஆகிய நான்கு விஷயங்களை பலப்படுத்துவதை மையமாக வைத்தே சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதாவது குழந்தை உருவாவதற்கு ஏற்ற சீரான கருவுருதல் காலம், ஆரோக்கியமான கர்ப்பப்பை, ஆரோக்கியமான சினை முட்டை, கரு வளர்வதற்கான சரியான ஊட்டச்சத்து ஆகிய நான்கு விஷயங்களை பலப்படுத்த உணவு கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆயுர்வேத முறைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் உடலமைப்பும் மாறுபடும் என்பதால் இந்த பாரம்பரிய சிகிச்சை முறைகளை கண்டிப்பாக மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே செய்ய வேண்டும்” என்று அந்த மருத்துவமனையின் மற்றொரு மருத்துவரான ஸ்ரேயா ஸ்ரீ சுவர்ணா கூறியுள்ளார்.
