சமையலுக்கு மணமும் சுவையும் சேர்க்கும் கொத்தமல்லி இலை, வாங்கிய சில நாட்களிலேயே வாடிவிடுவது பல வீடுகளில் இருக்கும் பிரச்சினை. குறிப்பாக ஒரு கட்டு கொத்தமல்லியை வாங்கிவிட்டு, அதில் பாதியை மட்டுமே பயன்படுத்தும் போது மீதமுள்ள இலைகளைப் பாதுகாப்பது சிரமமாக இருக்கும். ஆனால், சில எளிய முறைகளைப் பின்பற்றினால் கொத்தமல்லியை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் சேமித்து வைக்கலாம்.
தண்ணீரில் வைத்து ஃப்ரிட்ஜில் சேமிக்கலாம்
கொத்தமல்லியில் வேர் இருந்தால், அதை வெட்டி அகற்றாமல் முதலில் சிறிதளவு தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் வைக்கலாம். ஒரு கட்டு பூக்களை வைப்பது போல, அதன் வேர்கள் மட்டும் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும்.
இலைகள் அதிகமாக நெருக்கமாக இல்லாமல் இருக்க ரப்பர் பேண்ட் அல்லது கட்டை அகற்றி, தண்டுகளைச் சற்று பிரித்து வைக்க வேண்டும். பின்னர் முழு கட்டையும் ஒரு பிளாஸ்டிக் பையால் மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். இந்த முறையில் இலைகள் விரைவாக உலர்ந்து போவதைத் தடுக்க முடியும்.
காகிதத் துணி முறையும் நல்ல பலன் தரும்
முதலில் கொத்தமல்லி இலைகளை சுத்தமாகக் கழுவி, அதிலுள்ள ஈரப்பதத்தை நன்றாக உலர்த்த வேண்டும். ஈரம் அதிகமாக இருந்தால் இலைகள் சீக்கிரம் அழுகத் தொடங்கலாம்.
பின்னர் இலைகளை கிச்சன் பேப்பர் அல்லது பேப்பர் டவலில் சுற்றி, அதை ஒரு பிளாஸ்டிக் பையில் அல்லது மூடியுள்ள டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் சேமிக்கலாம். பேப்பர் அதிக ஈரமாகிவிட்டால் அதை மாற்றுவது நல்லது. சிலர் இந்த முறையில் இரண்டு வாரங்கள் வரை கொத்தமல்லியை நல்ல நிலையில் வைத்திருப்பதாகவும் பகிர்ந்துள்ளனர்.
அதிக நாட்களுக்கு ஃப்ரீசரில் வைக்கலாம்
கொத்தமல்லியை நீண்ட காலத்திற்கு சேமிக்க வேண்டும் என்றால் ஃப்ரீசர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இலைகளை நன்றாகக் கழுவி, முழுமையாக உலர்த்திய பிறகு பொடியாக நறுக்கி, சிறிய அளவுகளாகப் பிரித்து ஃப்ரீசர் பைகளில் வைக்கலாம்.
மற்றொரு முறையாக நறுக்கிய கொத்தமல்லியை ஐஸ் கியூப் ட்ரேயில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து உறைய வைக்கலாம். தேவையான நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு க்யூப்களை எடுத்து குழம்பு, கிரேவி அல்லது பிற சமைத்த உணவுகளில் சேர்க்கலாம். ஆனால் இவ்வாறு உறைய வைத்த கொத்தமல்லி, சாலட் அல்லது அலங்காரத்திற்கு பயன்படுத்தும்போது புதிய இலைகளைப் போல இருக்காது.
வேர்களையும் வீணாக்காதீர்கள்!
கொத்தமல்லியின் வேர்களையும் தனியாகச் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். குறிப்பாக சில ஆசிய சமையல் வகைகளில் கொத்தமல்லி வேர் நல்ல மணத்தையும் சுவையையும் தருகிறது. வேர்களை சுத்தம் செய்து தனியாக ஃப்ரீசரில் வைத்து, தேவையானபோது குழம்புகள் அல்லது மசாலா கலவைகளில் பயன்படுத்தலாம்.
எந்த முறையைத் தேர்வு செய்தாலும், அழுகிய அல்லது வாடிய தண்டுகளை உடனுக்குடன் அகற்றுவது முக்கியம். அதிக ஈரப்பதத்தைத் தவிர்த்து, சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் சேமித்தால், கொத்தமல்லியை வாங்கிய உடனேயே வீணாக்காமல் பல நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.
