ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில் பொதுக்கருத்துக்கு ஏற்றவாறு செயலாற்றுவோம்’ என மத்திய அரசின் சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 32ஆவது உச்சி மாநாட்டில் இலங்கை போர்க்குற்ற விவகாரம் பற்றி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2015இல் மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட உள்ளது. இந்த தீர்மானத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், தமிழர் அமைப்புகள் இந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த பிரச்னை குறித்து மாநிலங்களவையில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது, “ஆக்கபூர்வமாகவும் ஒற்றுமையாகவும் செயல்படுவதன் மூலம் மனித உரிமைகளை காத்திட முடியும். அதன் அடிப்படையிலே ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவின் செயல்பாடு இருக்கும்.
கடந்த 2015ஆம் ஆண்டில் ஐ.நா-வில் அமெரிக்கா ஆதரவிலான இலங்கை தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இப்போதும் அதேபோன்ற தீர்மானம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவில் முன்வைக்கப்பட்டுள்ளது. எங்களது நோக்கம் இலங்கை தமிழர்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பதே ஆகும். இதை இருவழிகளில் செயல்படுத்த இயலும். நிர்பந்தப்படுத்தியோ அல்லது விளக்கியோ அதை சாதிக்க முடியும். இலங்கை தமிழர்கள் பிரச்னை தொடர்பாக உறுப்பினர்களின் மன வேதனை எனக்குப் புரிகிறது. இலங்கை மீதான தீர்மானத்தில் பொதுக் கருத்து அடிப்படையில் செயல்பட மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என அவர் பேசினார்.
