உலகம் முழுக்க வேகமாக வளர்ந்த ஃபாஸ்ட் ஃபேஷன் நிறுவனமான ஷீன் (SHEIN), இந்தியாவுக்குத் திரும்பியும் எதிர்பார்த்த வெற்றியை எட்ட முடியாமல் திணறுகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயிலோடு சேர்ந்து 2025 பிப்ரவரியில் மறுபடி இந்தியச் சந்தைக்குள் வந்தாலும், வாடிக்கையாளர்களை இழுப்பதில் பல சவால்கள் எழுந்துள்ளன.
விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள், தொழில்நுட்பக் குறைகள், கடுமையான போட்டி ஆகியவை அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன.
60 லட்சம் பயனர்கள் vs 10 கோடி
சந்தை ஆய்வு நிறுவனமான சென்சார் டவர் (Sensor Tower) மதிப்பீட்டின்படி, 2026 அக்டோபரில் ஷீன் செயலியின் மாதாந்திரச் செயலில் உள்ள பயனர்கள் சுமார் 60 லட்சம்.
அதே காலத்தில் முன்னணி நிறுவனமான மின்த்ராவுக்கு (Myntra) சுமார் 10 கோடி பயனர்கள் இருந்தனர். 2019-ல் ஷீனின் உலகளாவிய மாதாந்திரப் பயனர்களில் 67 சதவீதம் இந்தியாவிலிருந்துதான் வந்தனர்.
2020-ல் பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி ஷீன் உள்ளிட்ட சீனச் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அந்த இடைவெளியில் இந்திய ஆன்லைன் ஃபேஷன் சந்தையில் பல புதிய நிறுவனங்கள் வலுவாக வளர்ந்துவிட்டன.
ஷீனின் தொழில்நுட்பம் கைகொடுக்கவில்லையா?
ஷீனின் வெற்றிக்குப் பின்னால் அதன் தனிப்பட்ட தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை விரைவாகக் கண்டுபிடித்து, புதிய ஆடைகளை வடிவமைத்து, பத்து நாட்களுக்குள் தயாரிக்கும் திறன் அதற்கு உண்டு.
ஆனால் இந்தியக் கூட்டாண்மையில் அந்தத் தொழில்நுட்பத்தை ரிலையன்ஸால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை என்று தகவல்கள் சொல்கின்றன. அதனால் உற்பத்தியாளர்களைத் தேர்வு செய்வது முதல் ஆடை தயாரிக்கும் நடைமுறைகள் வரை பலவற்றையும் ரிலையன்ஸ் புதிதாக உருவாக்க வேண்டியிருக்கிறது.
சீனாவில் இருக்கும் ஷீனின் மிகப்பெரிய உற்பத்தி வலையமைப்பு இந்தியாவில் இல்லை. அதற்குப் பதிலாகச் சிறிய இந்திய உற்பத்தியாளர்களை நம்பியிருப்பதால், தயாரிப்பு நேரம் கூடியுள்ளது. வீணாகும் பொருட்களின் அளவும் அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
விளம்பரச் செலவு ஏறியும் இறங்கும் பதிவிறக்கம்
செப்டம்பரில் விளம்பரச் செலவை முந்தைய ஆண்டைவிட 60 சதவீதம் கூட்டியும், ஷீன் செயலியின் பதிவிறக்கங்கள் 73 சதவீதம் சரிந்து 7.9 லட்சமாகின. அக்டோபரில் அது இன்னும் குறைந்து 7.4 லட்சமானது. இந்தியப் பயனர்கள் வாரத்துக்குச் சராசரியாக நான்கு நிமிடங்கள் மட்டுமே செயலியில் செலவிடுகிறார்கள். ஷீனின் உலகளாவிய சராசரியான 6.6 நிமிடத்தை விட இது குறைவு.
ரிலையன்ஸ் இன்னும் நம்பிக்கையோடு
மின்த்ரா, ட்ரெண்ட்ஸ், ஆதித்ய பிர்லா ஃபேஷன், மீஷோ போன்ற நிறுவனங்கள் ஏற்கெனவே இந்திய வாடிக்கையாளர்களிடம் வலுவாக இடம் பிடித்துவிட்டன. அதனால் ஷீனுக்கு மறுபடி இடம் பிடிப்பது எளிதாக இல்லை.
இருந்தாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பெரிய அளவில் விளம்பரப் பிரச்சாரம் நடத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் சொல்கின்றன. இந்திய ஆன்லைன் ஃபேஷன் சந்தை 2028-க்குள் 45 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஷீன் மறுபடி தாக்குப்பிடிக்குமா என்பதுதான் கேள்வி.








