அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் அமைதியானது.. அமலுக்கு வந்த விதிமுறைகள் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Regulations Coming into Force Following the Conclusion of Election Campaigning

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கடந்த சில நாட்களாகத் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த 37 நாட்களாக நடைபெற்று வந்த தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. வீடு வீடாக, வீதி வீதியாகப் பொதுமக்களைச் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர், முதல்வர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் மூலம் மக்களைச் சந்தித்தனர். தமிழகம் முழுவதும் களைகட்டியிருந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.

ADVERTISEMENT

பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் அமலுக்கு வரும் விதிமுறைகள்

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். 21.4.2026 அன்று மாலை 6.00 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில், 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் அமலில் இருக்கும்:

தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

ADVERTISEMENT

யாதொரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் (Twitter) போன்ற ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்புகளுக்கும் இது பொருந்தும்.

பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள், திரையரங்கச் செயல்பாடுகள் அல்லது ஏதேனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பரப்புரை செய்யக் கூடாது.

ADVERTISEMENT

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதிக்கு வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 21.4.2026 அன்று மாலை 6.00 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்.

வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் வாகன அனுமதிகள் உட்பட அனைத்து வாகன அனுமதிகளும் 21.4.2026 மாலை 6.00 மணி முதல் ரத்தாகிவிடும்.

வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளரின் சொந்தப் பயன்பாட்டிற்கு ஒரு வாகனம், தேர்தல் முகவருக்கு ஒரு வாகனம் மற்றும் பணியாளர்கள் பயன்பாட்டிற்கு ஒரு வாகனம் மட்டுமே அனுமதி உண்டு. இதற்கான அனுமதியைத் தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்குவார்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவோ அல்லது அழைத்துச் செல்லவோ வேட்பாளர்கள் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது. இது தண்டனைக்குரிய முறைகேடான செயலாகும்.

வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்; அங்குத் தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share