தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன். சிவகங்கை மாவட்டம் ஒலக்கூரைச் சேர்ந்த ராமராஜன், மதுரை அருகில் உள்ள திரையரங்கு ஒன்றில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் பணி மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.
பள்ளிப்பருவம் முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்த இவர், எம்.ஜி.ஆர். திரைப்படங்களை சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக்கூடியவர்.
எம்.ஜி.ஆரைப்போல் ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்திறங்கிய ராமராஜனுக்கு காலம் அவ்வளவு எளிதாக ஏற்றத்தை கொடுக்கவில்லை. புரொடக்ஷன் பையனாக பணியில் சேர்ந்து தயாரிப்பாளரும், இயக்குநருமான ராமநாராயணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார்.
இதனிடையே, ’நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற திரைப்படம் மூலம் முதல்முறையாக ஹீரோவாக அறிமுகமானார் ராமராஜன். அவருடைய கிராமத்து சாயலும், கள்ளம் கபடமற்ற பேச்சும், சினிமாவில் அவருக்கென தனிக் கூட்டத்தை உருவாக்கியது.
கூடவே அவர் அணியும் கலர்கலரான சட்டையும், உடல்மொழியும் எம்.ஜி.ஆரை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. ராமராஜனின் வளர்ச்சிக்கு அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும் அதற்கு இசையமைத்த இளையராஜாவும் ஒரு காரணம்.
ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு இணையாக தமிழகம் முழுவதும் ராமராஜனுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகின. ராமராஜன் மன்றம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலை 90களின் பிற்பகுதி வரை இருந்தது.
1989ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளும் ராமராஜனின் கால்ஷீட்கள் நிரம்பி வழிந்தன. வருடத்திற்கு 8 படங்கள் வரை ராமராஜனின் நடிப்பில் வெளியாகிய காலம் அது.
இப்போது உள்ள தயாரிப்பாளர்களை போல் புரோமோஷன், நொடிக்குநொடி தொலைக்காட்சிகளில் விளம்பரம் என்றெல்லாம் அந்தக்காலத்தில் எந்த தயாரிப்பாளரும் மெனக்கெட்டது கிடையாது.
முழுக்க முழுக்க கதையையும், கதாநாயகனையும் நம்பி படத்தை தயாரித்தார்கள். ராமராஜனின் சென்னை சாலிகிராமம் இல்லத்தின் முன்பு அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் கூட்டமாக காத்திருந்தார்கள்.

ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் எல்லாமே கிராமத்தை கதைக்களமாக கொண்டதாக இருக்கும் என்பதுடன் மது, புகைப்பிடிக்கும் கதாபாத்திரங்களை தவிர்த்துவிடுவார்.
ராமராஜன் நடிப்பில் வெளியான, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ (1987), ’செண்பகமே செண்பகமே’ (1988), ’எங்க ஊரு காவல்காரன்’ (1988), கரகாட்டக்காரன் (1989) மற்றும் ’பாட்டுக்கு நான் அடிமை’ (1990) ஆகிய படங்கள் நகரம் முதல் கிராமம் வரை கல்லா கட்டியதுடன், இயல்பாகவே மக்கள் விரும்பும் நாயகனாக மாறிப்போனார்.
இதில், ’கரகாட்டக்காரன்’ 1989ல் வெளியாகி தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீசை புரட்டி போட்டது.
25 மையங்களில் 100 நாட்களுக்கு மேலும் ஏழு மையங்களில் ஒரு வருடமும், நான்கு திரையரங்குகளில் 400 நாட்களும் ஓடியது. இது ராமராஜன் கதாநாயகனாக நடித்த 18 வது படம்.
அடர்த்தியான கலரில் சட்டையும், பேண்ட்டும் படங்களில் ராமராஜனின் அடையாள உடைகளாக மாறின. கிராமங்களில், ’என்னடா ராமராஜன் சட்டையா’ எனக் கேட்கும் அளவு அவரது உடைகள் பிரபலமானது.
திரைப்பட நடிகராக நடித்ததன் மூலம் மதுரையில் நடனா, நாட்டியா எனும் திரையரங்கை கட்டினார். இந்த திரையரங்கில்தான் ’கரகாட்டகாரன்’ ஒரு வருடத்தை கடந்து ஓடியது. இந்தப்படம் நிகழ்த்திய சாதனையை வேறு எந்த தமிழ் சினிமாவும் இதுவரை முறியடிக்கவில்லை.
சிவாஜி புரடொக்ஷன் தயாரித்த ‘சந்திரமுகி’ படம், சென்னையில் அவர்களுக்கு சொந்தமான திரையரங்கில் ஒரு வருடத்தை கடந்து ஓட்டப்பட்டது. ஆனால் ’கரகாட்டகாரன்’ போன்று நான்கு காட்சிகள் இல்லாமல் ஒரு காட்சி மட்டுமே ஓட்டப்பட்டது.
’கரகாட்டகாரன்’ வெகுஜன மக்களிடமும், வணிகரீதியாகவும் வெற்றிபெற்றதை கண்டு அன்றைய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
2000ஆம் ஆண்டுக்குப் பின் குடும்ப பிரச்சினை, அரசியல் தொடர்பு, தேர்தலில் போட்டி ஆகியவற்றால் சினிமாவில் இவருக்கான வாய்ப்புகள் குறைய தொடங்கியதுடன் ராமராஜனை கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்தவர்கள் அவரை வைத்து படம் தயாரிக்க விரும்பாமல் கொடுத்த அட்வான்சை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

மனைவி நளினியுடனான விவாகரத்து, ஜீவனாம்சம், கடன் நெருக்கடி காரணமாக சினிமா வருமானத்தில் சேர்ந்த சொத்துக்கள் எல்லாம் அவரைவிட்டு போனதுடன் பத்துக்கு பத்து அறையில் வாழ்க்கையை வாழ வேண்டிய சூழலுக்கு உள்ளானார் ராமராஜன். 2012ல் ’மேதை’ என்ற படத்தை ராமராஜன் இயக்கி நடித்தார். படம் வெற்றி பெறவில்லை.
கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ராமராஜன் ’சாமான்யன்’ படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ’தம்பிக்கோட்டை’, ’மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பற்றி அதில் நடிக்கும் ராதாரவி, ’சாமான்யன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது, “இது வேற ரூட்டில் போயிருக்க வேண்டிய படம். இதன் நல்ல நேரமோ, என்னவோ ராமராஜன் இந்த படத்தில் வந்து இணைந்துவிட்டார்.

நான் ராம நாராயணன் இயக்கத்தில் ’பேய்வீடு’ படத்தில் நடித்த சமயத்திலேயே ராமராஜனை அந்தப் படத்தின் உதவி இயக்குனராக எனக்கு தெரியும். அப்போதே அவரிடம் சில விஷயங்களை கவனித்து, ’சீக்கிரமாக நீ நடிகன் ஆகிவிடுவாய்’ என்று சொன்னேன். அதுதான் நடந்தது. அதன்பிறகு அவருடன் சில படங்களில் இணைந்து நடித்துள்ளேன். ராமராஜன் என்றைக்குமே ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்ததில்லை.
அவரது படங்கள் அந்த இருவரின் படங்களைவிட நன்றாக ஓடின. ஆனால் மற்ற ஹீரோக்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது. ஒருமுறை நடிகர் கமல் விமான நிலையத்தில் இவரை பார்த்துவிட்டு இவரது ஹேர்ஸ்டைல் ஒரிஜினல்தானா, இல்லை விக் வைத்திருக்கிறாரோ என்கிற சந்தேகத்தில் தொட்டுப் பார்த்தாராம். ஆனால் இப்போதும் அதேபோன்ற ஹேர்ஸ்டைலுடன்தான் காட்சியளிக்கிறார்.
அவருக்கு மனசு சுத்தம். அதனால்தான் முடி கொட்டவில்லை என்று நினைக்கிறேன். வெளியூர் செல்லும்போது மதுரைப்பக்கம் எங்கோ ஒரு கிராமத்தில் ராமராஜன் ரசிகர் மன்றம் என்கிற போர்டை பார்த்தபோது, ’இவர் அழியமாட்டார். இவரை அழிக்க முடியாது’ என்று அருகில் இருந்தவரிடம் கூறினேன். நான் இப்படிச் சொல்வது ஏனென்று சாமான்யனுக்கு புரியும்” என்றார்

இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது, “ராமராஜன் 12 வருடம் கழித்து வருகிறாரே என்று கவலைப்பட தேவையில்லை.. காரணம் நெருஞ்சி முள் அடிக்கடி பூக்கும்.. ஆனால் குறிஞ்சி பூ 12 வருடத்திற்கு ஒரு முறைதான் பூக்கும். அவரும் குறிஞ்சிபோலதான். ’இந்த வயதில் ஏன் நடிக்க வருகிறார்’ என கேள்வி எழுப்பும் சிலருக்கு நான் சொல்வது, நடிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல. இவர் இனி தொடர்ந்து நடிப்பார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற தன்னம்பிக்கையை இன்றுவரை விடாமல் தொடர்ந்து வருகிறார். அதற்காகவே அவரை பாராட்டலாம்” என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசும்போது, “ஒரு சில ஜாம்பவான்கள் கோலோச்சிக்கொண்டு இருந்த சமயத்தில் நான் சினிமாவில் நுழையாமல் போய்விட்டேனே என்றும் அவர்களுக்கு பாடல் எழுத முடியவில்லையே என்றும் வருத்தப்பட்டது உண்டு. அப்படிப்பட்டவர்களில் ராமராஜனும் ஒருவர். காரணம் அது ஒரு பொற்காலம். கிட்டத்தட்ட 3000 பாடல்களை எழுதி இருந்தாலும் ராமராஜனுக்கு எழுதவில்லையே என்கிற ஏக்கம் இருந்தது.
சோளக்காட்டில், வயல்வெளியில், பயணங்களில் என அவரது படத்தின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த எனக்கு, என்னுடைய ஆசை நிராசை ஆகிவிடாமல் இன்று அவர் நடிக்கும் படத்திற்கு பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆசிர்வாதம்தான். தமிழ் சினிமாவில் ராமராஜன் என்பவருக்கான நாற்காலி இப்போதுவரை காலியாகவே இருக்கிறது. இதோ அவரே மீண்டும் அதில் வந்து அமர்ந்துகொண்டார்” என்று சிலாகித்து பேசினார்.

இந்த டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு திடீர் சிறப்பு விருந்தினராக வருகை தந்த இயக்குனரும் நடிகருமான சந்தானபாரதி பேசும்போது, “முப்பது வருடங்களுக்கு முன்பு ’கரகாட்டக்காரன்’ படத்தில் ராமராஜன் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் இணைந்து நடித்தோம். தமிழ்நாட்டில் இப்போது என்னை மூலைமுடுக்கெல்லாம் பலருக்கும் தெரிகிறது என்றால் அதற்கு காரணம் ’கரகாட்டக்காரன்’ படமும் அதில் ராமராஜனுக்கு வில்லனாக நடித்ததும்தான். இத்தனை வருடம் கழித்து அவர் மீண்டும் நடிக்க வந்திருப்பது மகிழ்ச்சி” என்று கூறினார்.
தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்களை வாழவைத்த எம்.ஜி.ஆர் பாதுகாப்பில் நடிகை நளினியை காதல் திருமணம் செய்தவர். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெயலலிதாவால் திருச்செந்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறக்கப்பட்டு முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்றவர் என எல்லா அம்சங்களும் இருந்தும் சினிமாவில் தனது வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முடியாத ராமராஜன் 61 வயதில் கதையின் நாயகனாக தன்னம்பிக்கையுடன் ஐந்து மொழிகளில் தயாரிக்கப்படும் ’சாமான்யன்’ படத்தில் களமிறங்குகிறார். ’கரகாட்டகாரன்’ வெற்றியை மீட்டு எடுப்பாரா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.
இராமானுஜம்
பொன்னியின் செல்வனுக்குப் போட்டியாக நானே வருவேன்: தாணுவின் திட்டம் என்ன?
