கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்… தனுஷ் நடிக்கும் நானே வருவேன் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகிறது.
செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில், ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு, இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் பாடல் “வீரா சூரா வாடா வாடா” என்ற பாடல் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால் படத்தின் வெளியீட்டுத் தேதியை மட்டும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வெளியிடாமல் இருந்தார்.
ஆனால், ஏற்கனவே ‘நானே வருவேன்‘ படம் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வனுடன் போட்டி போடும் நானே வருவேன்
தமிழின் மாபெரும் காப்பியமான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் பொன்னியின் செல்வன் பாகம் 1 வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டன.

மேலும் படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகப் பல இடங்களுக்குச் சென்று புரோமோஷன் வேலைகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது பொன்னியின் செல்வன் காப்பியத்தைப் படமாக எடுக்க வேண்டும் என்ற தமிழ் திரையுலகின் கனவும் அதன் வெற்றியைக் காணக் காத்திருக்கிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் ஒரு நாளுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் நானே வருவேன் வெளியாகவுள்ளது.
இதனால், பொன்னியின் செல்வன் படத்தோடு நானே வருவேன் போட்டி போடுகிறதா என்று பேசப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் காத்திருப்பது போலவே, தனுஷ், செல்வராகவன் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பணியாற்றிய படம் மற்றும் யுவனின் இசையில் உருவாகியுள்ளதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
மேலும் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பது இதன் கூடுதல் சிறப்பு. ஆகையால் இரண்டு படங்களில் ரசிகர்கள் எந்த படத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக அமைந்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்டம் வெளியாகும் நேரத்தில் கலைப்புலி எஸ். தாணு, ’நானே வருவேன்’ படத்தை எதற்காக போட்டியாக வெளியிடுகிறார் என்ற கேள்வியும் திரை விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மோனிஷா
பொன்னியின் செல்வன் திரைப்படம்: எதிர்பார்ப்புகள், சர்சைகள், விவாதங்கள்…