Instagram, Facebook ல் அரசியல்.. தவெகவினரை விளாசிய ராஜேந்திர பாலாஜி

Published On:

| By Pandeeswari Gurusamy

Rajendra balaji

இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் அரசியல் செய்து கொண்டு ‘நாங்கள் தான், நாங்கள் தான்’ என்று இன்று தவளை மாதிரி கத்தினால் ஒன்றும் ஆகாது என நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினரை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் சிவகாசி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்பாளராக களம் காண்கிறார். தேர்தல் பணிகளுக்கு இடையே அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ADVERTISEMENT

அப்போது, தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி நிர்மல் குமார், “தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சி இருக்காது. தோல்வியடையும் பின்னர் பாஜகவில் சரணடைவார்கள்” என்று பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பைத்தியம் பிடித்து பேசுபவர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல முடியுமா? அதிமுகவை கருணாநிதி உள்ளிட்ட யார் யாரோ அழிக்கப் பார்த்தார்கள், முடியவில்லை. விஜய் வந்தா அழித்து விடப் போகிறார்.

கொய்யா பழம் கூட

அதே நிர்மல் குமார் அதிமுகவின் ஐடி விங்கில் தானே இருந்தார். தவெகவிற்கு சென்ற உடன் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து போய் உள்ளார். அங்கு ஒன்றும் கிடைக்காது. தவெகவிற்கு போனவர்கள் எல்லோருக்கும் ஒரு கொய்யாப்பழம் கூட கிடைக்காது. போனவர்கள் எல்லோரும் திரும்பி வந்து, ஏற்கனவே இருந்த இடங்களில் உட்கார்ந்து கொள்வார்கள்.

ADVERTISEMENT

நிர்மல் குமார் எவ்வளவு வேகமாக அதிமுகவிற்கு வரப் போகிறார் என்பதைப் பாருங்கள். அவர் எனக்கு நண்பன் தான்.டெபாசிட் வாங்க முடியாது. தவெக வேட்பாளர்கள் எல்லோரும் இன்ஸ்டாகிராமில் தான் அரசியல் செய்கிறார்கள். மக்களை சந்திக்கும் திறமையோ, தகுதியோ அவர்கள் யாருக்கும் கிடையாது. தவெகவில் சேர்ந்துள்ள அரசியல் அனுபவம் வாய்ந்த ஒரு சில ஆட்கள் மட்டுமே கொஞ்சம் மரியாதையான வாக்குகள் வாங்குவார்கள். மற்றபடி 98 சதவிகிதம் வேட்பாளர்கள் மிக மிக பின்தங்கிய நிலைக்குப் போய்விடுவார்கள்.

திமுக அதிமுகவிற்கு இடையில் தான் போட்டி

இப்போது விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்கிறார். ஒரு காலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருந்த திமுகவையே அடித்து, பலமாகி ஆட்சியைப் பிடித்த கட்சி அதிமுக. எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார், அதைத்தொடர்ந்து அம்மா ஆட்சியைப் பிடித்தார். 32 ஆண்டுகள் நாட்டை ஆண்ட கட்சி அதிமுக. திமுகவையே காலி செய்து வளர்ந்த கட்சி அதிமுக. எங்களை பொறுத்தவரை போட்டி என்றால் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி. களத்தில் மற்ற ஆட்களுக்கு வேலையே இல்லை.

ADVERTISEMENT

பூத்தில் நிற்க மாட்டார்கள். தவெகவில் இருப்பவர்கள் ஏப்ரல் 23ஆம் தேதி 11 மணிக்கு மேல் யாரும் ஒருவர் கூட பூத்தில் இருக்க மாட்டார்கள். இன்ஸ்டாகிராமிலும், பேஸ்புக்கிலும் அரசியல் செய்து கொண்டு ‘நாங்கள் தான், நாங்கள் தான்’ என்று இன்று தவளை மாதிரி கத்தினால் ஒன்றும் ஆகாது. வீணாகப் போகப் போகிறார்கள். அந்தக் கட்சியில் சீட்டு வாங்கியவர்கள் எல்லாம் வீணாகப் போகப் போகிறார்கள்” என்று காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share