சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தமிழகத்தில் விஜய் ஆதரவுடன் அதிமுக- பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டியது. விஜய்யிடம் மத்திய அமைச்சர் அமித்ஷா ஏற்பாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் விஜய்க்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி; எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என டீல் பேசப்பட்டது என்பதை நமது மின்னம்பலம் முதன் முதலில் செய்தி வெளியிட்டது. இதனையே பின்னர் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் பொதுக்கூட்டத்தில் உறுதி செய்து பேசினார்.
ஆனால், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி டீலை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இதனால் பாஜகவின் விஜய்யுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி அடைந்தது. தற்போது விஜய் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று மார்ச் 31-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனால் விஜய் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் எனக் கூறியுள்ளார்.
