உ.பி. தேர்தலுக்காக ராகுல்-பிரியங்கா போராட்டம்? ‘டென்ஷனில்’ அகிலேஷ்… கார்கே விருந்து, ஜந்தர் மந்தர் அணிவகுப்பு புறக்கணிப்பு!

Published On:

| By Mathi

Akilesh- Rahul Priyanka-UP Election 2027

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள், ‘இந்தியா’ கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸின் இந்த அதிரடி அரசியல் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை ‘டென்ஷன்’ ஆக்கியிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நேற்று (அக்டோபர் 6) டெல்லியில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பங்கேற்றார். அவரையும் டெல்லி போலீசார் காவலில் எடுத்து பின்னர் விடுவித்தனர். ஆனால் இதற்குப் பிறகுதான் காங்கிரஸ் – சமாஜ்வாதி இடையேயான உரசல் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

ராகுலின் திடீர் போராட்டம்

போலீசாரால் விடுவிக்கப்பட்ட பின்னர், ராகுல் காந்தி திடீரென ஆகாஷ்வாணி பவனுக்குள் சென்று உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். பின்னர் பிரியங்கா காந்தியும் அவருடன் இணைந்தார். ஆனால் இந்தப் போராட்டம் தொடர்பாக அகிலேஷ் யாதவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

போலீசாரால் விடுவிக்கப்பட்டதும் அகிலேஷ் யாதவ் லக்னோ திரும்பிவிட்டார். ராகுல் காந்தியின் திடீர் போராட்டம் நீடித்த நிலையில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் கடைசி நேரத்தில் அதில் இணைந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ‘இந்தியா’ கூட்டணியின் போராட்டம், ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் போராட்டமாக மாற்றப்பட்டுவிட்டது என்பது சமாஜ்வாதி கட்சியின் அதிருப்திக்கு காரணம்.

சமாஜ்வாதி புறக்கணிப்பு

இதை வெளிப்படுத்தும் விதமாக இன்று (அக்டோபர் 7) டெல்லி ஜன்பத்தில் உள்ள சாகர் ரத்னா உணவகத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த மதிய விருந்து நிகழ்ச்சியை சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

ADVERTISEMENT

இந்த விருந்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். ஆனால் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ஒருவர் கூட இந்த விருந்தில் பங்கேற்கவில்லை. அதன் பின்னர் நடந்த ஜந்தர் மந்தர் நோக்கிய அணிவகுப்பு, ஜந்தர் மந்தர் போராட்டம் ஆகிய இரண்டிலும் அகிலேஷ் யாதவும், சமாஜ்வாதி எம்.பி.க்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

சமோசா சாப்பிடுவோம்

கார்கேவின் மதிய விருந்தில் ஏன் பங்கேற்கவில்லை என அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, ”ஒரு மதிய விருந்துடன் முடிந்துவிடப் போவதில்லை; எதிர்காலத்தில் தேநீர் அருந்திக்கொண்டே சந்திக்கலாம், அனைவரும் ஒன்றாக அமர்ந்து சமோசா சாப்பிடலாம்” என்று கிண்டலாக பதிலளித்தார்.

ஆனால் அகிலேஷ் யாதவின் இந்த விளக்கத்தைத் தாண்டி, 2027 உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்தான் இந்த உரசலின் பின்னணியா? என்ற விவாதமும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

உ.பி. தேர்தல்தான் காரணமா?

2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மாநிலத்தின் 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் கைப்பற்றின.

இந்த வெற்றியைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் தனது அரசியல் செல்வாக்கை மேலும் அதிகரிக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டிலும் இரு கட்சிகளிடையே ஏற்கனவே உரசல் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் சரிபாதியாக 200 தொகுதிகளை எதிர்பார்ப்பது சமாஜ்வாதி கட்சியை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமாஜ்வாதி கட்சியைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு 50 தொகுதிகளே அதிகம் என்பதுதான் நிலைப்பாடு.

இந்த பின்னணியில் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்களில் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை வகிப்பதையும் சமாஜ்வாதி கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதில் சமாஜ்வாதி உறுதியாக இருக்கிறது. ஆனால் வாக்காளர் பட்டியல், தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு ஆகியவற்றை முன்வைத்து ராகுல் காந்தி நடத்தி வரும் போராட்டங்கள் தேசிய அளவில் கவனம் பெறுகின்றன.

அத்துடன் உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் பகுதிகள் டெல்லியை ஒட்டியே அமைந்துள்ளன. இதனால் டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் போராட்டங்கள் தேசிய அளவில் மட்டுமின்றி, உத்தரப்பிரதேச அரசியலிலும் உடனடியாக கவனம் பெறுகின்றன.

இதனால் ராகுல்- பிரியங்கா காந்தியின் போராட்டங்கள் மூலம் காங்கிரஸ் தனது செல்வாக்கை அதிகரித்து, உ.பி. தொகுதிப் பங்கீட்டில் கூடுதல் இடங்களைக் கேட்பதற்கான அரசியல் அழுத்தத்தை உருவாக்குகிறதா என்ற சந்தேகம் சமாஜ்வாதி கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share