VIDEO: மதிய விருந்து ஓவர்… ஜந்தர் மந்தர் போராட்ட களம் நோக்கி பஸ்ஸில் கிளம்பிய ராகுல், கார்கே, பிரியங்கா

Published On:

| By Mathi

Gyanesh Kumar-Rahul - India Bloc Protest

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் இன்று (அக்டோபர் 7) டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் டெல்லி போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ராகுல் காந்தி உள்ளிட்டோர் குண்டு கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர். டெல்லி ஜன்பத்தில் உள்ள சாகர் ரத்னா உணவகத்தில் இந்த மதிய விருந்து நடைபெற்றது.

இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்றனர். அப்போது தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மதிய விருந்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,
“நேற்று சுமார் 300 எம்.பி.க்கள் தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க விரும்பினோம். ஆனால் அவர்கள் எங்களைச் சந்திக்கவில்லை. அங்கு போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறி டெல்லி போலீசாரும் எங்களைத் தடுத்து நிறுத்தினர். அதனால் இன்று போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தருக்குச் சென்று அமரப் போகிறோம். ஞானேஷ் குமார் இந்த நாட்டின் சட்டபூர்வமான தேர்தல் ஆணையர் அல்ல என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வோம்.

நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், ஞானேஷ் குமார் ஆகியோர் நாட்டின் ஜனநாயகத்தை அழித்துவிட்டனர். அவர்கள் நாட்டின் துரோகிகள். ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆக வேண்டும்.

ADVERTISEMENT

என் மீது ஏற்கனவே 45 எஃப்ஐஆர்கள் உள்ளன. என்னுடைய இலக்கு 100. என் மீது 100 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு எஃப்ஐஆரும் எனக்கு ஒரு பதக்கம் என்றார்.

இதையடுத்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் பேருந்தில் ஜந்தர் மந்தர் நோக்கிப் புறப்பட்டனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share