இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று (அக்டோபர் 7) 2-வது நாளாக ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்தில், ராகுல் காந்தியை போலீசார் தூக்கிச் சென்றதும், பிரியங்கா காந்தி சாலையில் படுத்து போராடியதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடுவதற்காக நேற்று பேரணியாகச் சென்ற ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு அருகேயுள்ள ஆகாஷ்வாணி பவன் வளாகத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டத்தின்போது, பிரியங்கா காந்தி இரும்பு கேட் மீது ஏறி மறுபக்கம் குதிக்க முயன்றார். இரவு வரை போராட்டம் நீடித்த நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

கார்கே மதிய விருந்து
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர். இந்த விருந்தின்போது அடுத்தகட்ட போராட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மதிய விருந்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நேற்று சுமார் 300 எம்.பி.க்கள் தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க விரும்பினோம். ஆனால் அவர்கள் எங்களைச் சந்திக்கவில்லை. அங்கு போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறி டெல்லி போலீசாரும் எங்களைத் தடுத்து நிறுத்தினர்.
அதனால்தான் இன்று போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஜந்தர் மந்தருக்குச் சென்று அமரப் போகிறோம். ஞானேஷ் குமார் இந்த நாட்டின் சட்டபூர்வமான தேர்தல் ஆணையர் அல்ல என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வோம்.
நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், ஞானேஷ் குமார் ஆகியோர் நாட்டின் ஜனநாயகத்தை அழித்துவிட்டனர். அவர்கள் நாட்டின் துரோகிகள். ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.
அப்போது எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “என் மீது ஏற்கனவே 45 எஃப்ஐஆர்கள் உள்ளன. என்னுடைய இலக்கு 100. என் மீது 100 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு எஃப்ஐஆரும் எனக்கு ஒரு பதக்கம்” என்றார்.

இதையடுத்து மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் பேருந்துகளில் ஜந்தர் மந்தர் நோக்கிப் புறப்பட்டனர்.
100 மீட்டருக்கு முன்பே தடுத்த போலீஸ்
ஆனால் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் சென்ற பேருந்துகளை ஜந்தர் மந்தரை அடைவதற்கு சுமார் 100 மீட்டருக்கு முன்பாகவே டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பேருந்துகளில் இருந்து இறங்கிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



போராட்டத்தைக் கைவிட மறுத்த ராகுல் காந்தியை அங்கிருந்து அகற்ற முயன்ற போலீசாருக்கும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



சாலையில் படுத்த பிரியங்கா
இதற்கிடையே பிரியங்கா காந்தி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசியல் சாசனப் புத்தகத்தைக் கையில் வைத்தபடி பிரியங்கா காந்தி சாலையில் படுத்திருந்தார். அப்போது ராகுல் காந்தியும் அவரது அருகே நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். பிரியங்கா காந்தியை அங்கிருந்து அகற்ற முயன்ற பெண் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். போலீசார் முதலில் ராகுல் காந்தியை தோள்களில் தூக்கிச் சென்று பேருந்தில் ஏற்றினர்; பின்னர் சாலையில் படுத்திருந்த பிரியங்கா காந்தி உள்ளிட்ட பெண் எம்.பி.க்களை பெண் போலீசார் அகற்றினர்.
பாரகம்பா காவல் நிலையத்தில் ராகுல்
ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள பாரகம்பா காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சத்ரசால் ஸ்டேடியத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அப்போது பேசிய பிரியங்கா காந்தி, “இந்த நாடு அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. இந்த அரசியல் சாசனத்துக்காக எங்கள் உயிரையும் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.

பஸ் டயர்களை பஞ்சராக்கிய தொண்டர்கள்
இதனிடையே ராகுல் காந்தியை சத்ரசால் ஸ்டேடியத்துக்கு அழைத்துச் செல்வதற்காக கொண்டுவரப்பட்ட பேருந்தின் டயர்களை காங்கிரஸ் தொண்டர்கள் பஞ்சராக்கினர்.
பின்னர் பாரகம்பா காவல் நிலையத்தில் இருந்து சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு ராகுல் காந்தி விடுவிக்கப்பட்டார். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் ”இந்தியா கூட்டணி” இன்றும் நடத்திய போராட்டங்களால் தலைநகர் டெல்லியில் 2-வது நாளாக பதற்றம் நிலவியது.
VIDEO
PHOTO GALLERY























