கைலாஷ் யாத்திரையில் ராகுல் காந்தி சந்தித்த 2 சீன அமைச்சர்கள் யார்? சீனாவுக்கு சென்ற 200 பேர் யார்? பாஜக எம்.பி. சரமாரி கேள்வி!

By Mathi

|

Published on 10 Nov 2026, 7:55 AM

Rahul Gandhi-Nishikant Dubey

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரையின்போது சந்தித்த 2 சீன அமைச்சர்கள் யார் என்றும், காங்கிரஸ்–சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தத்தின் கீழ் சீனாவுக்குச் சென்ற 200 பேர் யார் என்றும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நிஷிகாந்த் துபே வெளியிட்ட அறிக்கை: ராகுல் காந்தி 2018-ஆம் ஆண்டு மேற்கொண்ட கைலாஷ் மானசரோவர் யாத்திரையும், அப்போது அவர் 2 சீன அமைச்சர்களைச் சந்தித்ததாகக் கூறியிருப்பதும் பல முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன.

ADVERTISEMENT

ராகுல் காந்தி எந்த ஏற்பாட்டின் அடிப்படையில் இந்த யாத்திரையை மேற்கொண்டார்? சீன அமைச்சர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது யார்? அவர் சந்தித்த 2 அமைச்சர்கள் யார்? அந்தச் சந்திப்பு எங்கு நடைபெற்றது? அவர்களுடன் என்ன விவாதிக்கப்பட்டது?

இந்தச் சந்திப்புகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கோ, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கோ தகவல் தெரிவிக்கப்பட்டதா? கைலாஷ் மானசரோவர் யாத்திரை தனிப்பட்ட ஆன்மிகப் பயணம் என்று முதலில் கூறிய ராகுல் காந்தி, பின்னர் சீன அமைச்சர்களைச் சந்தித்ததாகத் தெரிவித்தது ஏன்?

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் கைலாஷ் பயணத்துக்கு முறையான அனுமதி கோரி விண்ணப்பம் எதுவும் வரவில்லை என்று 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆன்மிக யாத்திரை என்பது ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால் அந்தப் பயணத்தின்போது வெளிநாட்டு அரசின் பிரதிநிதிகளை, குறிப்பாக சீன அமைச்சர்களைச் சந்திப்பது தொடர்பாக வெளிப்படைத்தன்மை அவசியம்.

இந்தியா–சீனா உறவுகள் மிகவும் முக்கியமானவை. இருநாட்டு உறவுகள், ராஜதந்திர நடவடிக்கைகள், தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு இந்தச் சந்திப்புகள் தொடர்பாக ராகுல் காந்தி தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். வெளிநாட்டு அரசுகளுடனான தொடர்புகள் குறித்து வெளிப்படை தன்மையைக் கோருவது அரசியல் பிரச்சினை அல்ல; அது தேசிய நலனும் சார்ந்த விஷயம். இவ்வாறு நிஷிகாந்த் துபே தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel