அதிகார வேட்கையுடன், ஏழைகளுக்குப் பதிலாகப் பணக்காரர்களுக்காகவே மோடியும் மம்தா பானர்ஜியும் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள செராம்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘மோடி தன்னை தேசபக்தர் என்று கூறிக்கொண்டு நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்.
அதுபோன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏழைகளுக்கு பதிலாக பணக்காரர்களுக்கு உதவி வருகிறார். மோடியும் இதையேதான் செய்து வருகிறார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இவர்கள் இருவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புகிறார்களே தவிர, மக்களுக்காக உழைப்பதில்லை.
பிரதமர் எங்கு சென்றாலும், மக்களிடையே வெறுப்பையும் அச்சத்தையும் பரப்புகிறார்,பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாகவும், ஜிஎஸ்டியை ‘தவறான முறையில்’ அமல்படுத்தியதன் மூலமாகவும் நாட்டில் உள்ள சிறு தொழில்களுக்குப் பிரதமர் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மேற்கு வங்கம் ஒரு காலத்தில் நாட்டின் தொழில்துறை மையமாக இருந்தது, ஆனால் முதலில் இடது முன்னணியும், பின்னர் திரிணாமுல் காங்கிரஸும் எல்லாவற்றையும் அழித்துவிட்டன.
இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிரான காங்கிரஸின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்துக்கான தேர்தல்” என்று கூறியுள்ளார்.
