மீண்டும் உதயமானது டி.ஆர்.எஸ்:  புதிய கட்சி தொடங்கிய  கே.சி.ஆர் மகள் 

Published On:

| By Kavi

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தனது தந்தையின் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதியிலிருந்து பிரிந்து, தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற தனது புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டத்தில் உள்ள முனிராபாத்தில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில், தனது ஆதரவாளர்கள் புடைசூழ கவிதா புதிய கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை வெளியிட்டார். சுமார் 20 ஏக்கர் பரப்பளவிலான மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தெலங்கானாவின் 33 மாவட்டங்களிலிருந்தும் சுமார் 50,000 ஆதரவாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.

ADVERTISEMENT

மாநிலம் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் நோக்கத்தில்,  ‘தெலங்கானா ராஷ்டிர சமிதி’ என தனது கட்சிக்கு கவிதா பெயர் வைத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக  கே.சி.ஆர், தேசிய அரசியலில் தடம் பதிக்கும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு “தெலங்கானா ராஷ்டிர சமிதி” என்ற தனது கட்சியின் பெயரை ‘பாரத் ராஷ்டிர சமிதி’  என்று மாற்றினார். கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கவிதா பி.ஆர்.எஸ் கட்சியிலிருந்தும், தனது மேலவை உறுப்பினர்  பதவியிலிருந்தும் விலகினார்.

ADVERTISEMENT

தற்போது கவிதா  தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பழைய பெயரில் கட்சியை தொடங்கியிருக்கிறார். அதாவது,  பி.ஆர்.எஸ்  எனப் பெயர் மாற்றிய பிறகு, கட்சிக்கும் மக்களுக்குமான தெலங்கானா உணர்வு குறைந்ததாக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலடியாக இது அமைந்துள்ளது.

மாநிலத்தின் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் 2029-இல் நடைபெற உள்ள நிலையில், தனது தளத்தை வலுப்படுத்திக்கொள்ள கவிதாவுக்குப் போதிய கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share