கெஜ்ரிவால் கட்சி எம்.பி.க்களை ‘அள்ளிய’ பாஜக.. என்ன நடந்தது? மாநிலங்களவையில் பலம் அதிகரிப்பு!

Published On:

| By Mathi

AAP BJP

தேசிய அரசியலில் இன்று ஏப்ரல் 24-ந் தேதி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) மாநிலங்களவை எம்.பி.க்களின் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைப்பு நிகழ்வு.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா (Raghav Chadha) தலைமையில் அக்கட்சியின் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கூண்டோடு பாஜகவில் ஐக்கியமான செய்திதான் பேசுபொருளாகி இருக்கிறது.

ADVERTISEMENT

டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆம் ஆத்மியின் முக்கிய முகமாக அறியப்பட்ட ராகவ் சத்தா, தானும் தனது சகாக்களான

  • சந்தீப் பதக்
  • அசோக் மிட்டல்
  • ஸ்வாதி மாலிவால்
  • ஹர்பஜன் சிங் (கிரிக்கெட் வீரர்)
  • ராஜேந்தர் குப்தா
  • விக்ரம் சாஹ்னி

ஆகிய 6 எம்.பி.க்களும் பாஜகவில் இணைவதற்கான ஆவணங்களை மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்துள்ளதாக அறிவித்தார். ஆம் ஆத்மி கட்சி அதன் தொடக்கக் கொள்கைகளில் இருந்து விலகி, ஊழல் நிறைந்த பாதையை நோக்கிச் செல்வதாகக் கூறி, தனது இந்த முடிவுக்கு நியாயம் கற்பித்தார் ராகவ் சத்தா.

ADVERTISEMENT

சமூக வலைதளங்களில் விமர்சனம்

இந்த அரசியல் திருப்பம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி, பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. குறிப்பாக, ராகவ் சத்தா கடந்த 2023-ல் பாஜகவினரை “படித்தறிவில்லாத குண்டர்கள்” (illiterate goons) என்று கடுமையாக விமர்சித்த பழைய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அவரது முந்தைய விமர்சனத்திற்கும், இன்றைய பாஜக இணைப்பிற்கும் இடையே உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி இணையவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆம் ஆத்மி கட்சி, விலகிச் சென்ற எம்.பி.க்களையும் பாஜக தலைவர்களையும் சித்தரிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட கேலி வீடியோவை வெளியிட்டுள்ளது. இது “பஞ்சாப் மக்களின் ஆணையைத் துரோகம் செய்தவர்கள்” என்று விலகியவர்களைச் சாடுகிறது.

கட்சி தாவல் தடை சட்டம்

ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் மொத்தம் 10 உறுப்பினர்கள் இருந்த நிலையில், ராகவ் சத்தா தலைமையிலான 7 எம்.பி.க்களின் விலகல், அக்கட்சியின் பலத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், ஒரு கட்சி தனது மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு (2/3) அதிகமானோர் ஒரு குழுவாக இணைந்து வேறு கட்சியில் சேர்ந்தால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற விதியை மேற்கோள் காட்டி இந்த இணைப்பு நிகழ்ந்திருக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் இந்த நிகழ்வை பாஜகவின் “ஆபரேஷன் தாமரை” (Operation Lotus) என்று வர்ணித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுவரை நடந்தது என்ன?

ஏப்ரல் 2-ந் தேதியன்று ராகவ் சத்தாவை மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கோரி மாநிலங்களவை செயலகத்திற்கு ஆம் ஆத்மி கட்சி தலைமை கடிதம் எழுதியது. ராகவ சத்தாவுக்குப் பதிலாக அசோக் மிட்டல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஏப்ரல் 15-ந் தேதி ராகவ் சத்தாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட அசோக் மிட்டலுடன் தொடர்புடைய பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது.

ஏப்ரல் 17-ந் தேதியன்று ராகவ் சத்தாவுக்கு வழங்கியிருந்த பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்ற மறுநாளே, மத்திய அரசு அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை வழங்கியது. இது அவர் பாஜகவுக்குச் செல்லக்கூடும் என்ற ஊகத்தை உறுதிப்படுத்தியது.

இதனையடுத்து இன்று ஏப்ரல் 24-ந் தேதி அசோக் மிட்டலுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியேறுவதாக அறிவித்தார்.

அதே சமயம், ராகவ் சத்தா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, தாங்கள் பாஜகவில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து மொத்தம் 7 ஆம் ஆத்மி எம்.பிக்கள் தாங்கள் கூண்டோடு பாஜகவில் இணைந்துவிட்டதாகவும் அறிவித்தனர்.

ஆம் ஆத்மிக்கு பின்னடைவு

மாநிலங்களவையில் 10 எம்.பிக்களைக் கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு தற்போது வெறும் 3 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர்.

அத்துடன் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

பாஜகவின் பலம் உயர்ந்தது

மாநிலங்களவையில் 106 எம்.பிக்களை மட்டுமே கொண்டிருந்த பாஜகவின் பலம் தற்போது 113 ஆக அதிகரித்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 148 ஆகவும் உயர்ந்துள்ளது.

பாஜக (BJP): 113
நியமன உறுப்பினர்கள்: 7
அதிமுக (AIADMK): 5
ஐக்கிய ஜனதா தளம் (JDU): 4
தேசியவாத காங்கிரஸ் (NCP): 4
தெலுங்கு தேசம் (TDP): 2
சிவசேனா (SHS): 2
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் UPPL: 2
அசோம் கண பரிஷத் (AGP): 1
தேசிய மக்கள் கட்சி (NPP): 1
பாமக (PMK): 1
ராஷ்டிரிய லோக் தளம் (RLD): 1
ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM): 1
குடியரசுக் கட்சி -அதாவலே: 1
மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS): 1
சுயேட்சைகள்: 2

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share