டிஜிட்டல் திண்ணை: நம்பிக்கையில் ஸ்டாலின், எடப்பாடி.. விஜய் கட்சியில் ’அமைச்சரவை’ கலாட்டா.. பீதியில் பாஜக!

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும், “ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு
சேதி சொன்ன மன்னவருதான்”னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

வாருமய்யா.. எலக்‌ஷனை எல்லாம் ஜோரா முடிச்சுட்டீரு.. அடுத்து என்னவாம்?

ADVERTISEMENT

ஆமாய்யா.. நான்தான் எலக்‌ஷன் கமிஷனர் பாரு… ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகமாக இருக்குன்னு எலக்‌ஷன் கமிஷன் சொன்னதுல இருந்தே எல்லா கட்சிகளிலும் ஒரே பரபரப்புதான்…

முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான்னு எல்லாருமே ’கள நிலவரம்’ என்னான்னு ரொம்பவே ஆர்வமாக விசாரிச்சுகிட்டே இருக்காங்க..

ADVERTISEMENT

இதை பத்தி சிஎம் ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “ எலக்‌ஷன் முடிஞ்ச உடனேயே தன்னுடைய செயலாளர்களிடம் பேசுன ஸ்டாலின், ‘நிலவரம்’ என்னான்னு கேட்டாரு.. அவங்க மாவட்ட கலெக்டர்களை கூப்பிட்டு கேட்டாங்க.. கலெக்டர்கள் மாவட்டங்களோட நிலவரம் பத்தி கொடுத்த ரிப்போர்ட்டை ஸ்டாலினுக்கு அனுப்பி வெச்சிருக்காங்க..

அதுக்கு அப்புறமாக போலீஸ் அதிகாரிகள்கிட்ட நிலவரம் என்னான்னு விசாரிச்சாரு ஸ்டாலின்… அவங்களும் மாவட்ட எஸ்பிக்கள்கிட்ட ரிப்போர்ட் வாங்கி ஸ்டாலின்கிட்ட கொடுத்தாங்க..

ADVERTISEMENT

அதே மாதிரி திமுக மண்டல பொறுப்பாளர்கள்கிட்ட நேரடியாகவே எப்படி ஓட்டு பதிவாகி இருக்கு? தொகுதிகளில்ல என்ன மாதிரி சூழ்நிலை இருக்குன்னு கேட்டாரு.. அமைச்சர்கள்கிட்டேயும் இதே மாதிரி தகவல்களை கேட்டிருந்தாரு..

அதோட நிற்காம, முக்கிய வேட்பாளர்களுக்கும் போன் போட்டு, “எப்படி இருக்கு உங்க தொகுதி? எவ்வளவு செலவு செஞ்சிருக்கீங்க.. தெம்பா இருங்க.. நம்ம ஆட்சிதான் தொடரப் போகுது”ன்னு நம்பிக்கையா பேசினார்.

இவ்வளவு விவரங்களையும் கேட்டுட்டு சீனியர் அமைச்சர்கள்கிட்ட, “தனித்தே நம்ம ஆட்சி அமைப்போம்.. நமக்கு பெரிய பாதிப்பு இருக்காது.. கூட்டணி கட்சிகளுக்கு சில இடங்களில்ல பாதிப்பு இருக்குது.. விஜய்யால நம்ம ஓட்டு சதவீதம் அதிகமாகவும் போகலை.. நம்ம ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையும் இல்லை.. சைலண்ட்டா நமக்கு ஆதரவு இருக்குது”ன்னு சொன்னார் ஸ்டாலின்.

இதுக்கு பிறகுதான் இன்னைக்கு கொடைக்கானலுக்கு கிளம்பினார் ஸ்டாலின்.. மதுரை ஏர்போர்ட்டில் பிரஸ்ஸை பார்த்து, “வெற்றி வாய்ப்பு சூப்பராக உள்ளது” என கட்டை விரலை உயர்த்தி காட்டி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திட்டு கொடைக்கானல் போயிருக்கார் ஸ்டாலின்” என்றனர்.

இதே மாதிரி முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரம் இருக்கிறது.. அவங்ககிட்ட கள நிலவரம் எப்படி இருக்குன்னு விரிவாகவே கேட்டிருக்கிறார் எடப்பாடி.

அத்துடன் தேர்தலில் போட்டி போட்ட
முக்கியமான வேட்பாளர்களுக்கும் போன் போட்டு, டீட்டெயிலா தொகுதிகளோட நிலவரத்தை கேட்டுகிட்டாரு..

அதுக்கு பிறகு மூத்த நிர்வாகிகளிடம் பேசுறப்ப, “விஜய்யால நம்ம ஓட்டுதான் போகும்னு சில பேர் சொல்றாங்க.. எதுக்கு இப்படி குழப்புறாங்கன்னு தெரியலை.. போன டைம் விஜய் என்ன செஞ்சாரு.. கருப்பு சிவப்பு டிரெஸ்ல சைக்கிள் ஓட்டிகிட்டு போய் திமுகவுக்குதானே ஓட்டுப் போட்டாரு.. அவங்க ரசிகர்களும் திமுகவுக்குதானே போன டைம் ஓட்டு போட்டாங்க.. இப்ப விஜய் தனியா நிக்கிறாரு.. அப்ப திமுகவோட ஓட்டுகளைதானே அவர் பிரிப்பார்.. நம்ம ஓட்டுகளை எப்படி அவர் பிரிப்பார்னு சொல்றாங்க?

திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையிலதான் மக்கள் இருக்காங்க.. அதனால நாம ஆட்சி அமைக்கிறதுல எந்த பிரச்சனையுமே வராது..” என்று சொல்லி இருக்கிறார் எடப்பாடி.

அத்துடன், அதிமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த ’பிரமானியா’ நிறுவனம் நடத்திய சர்வே முடிவுகள்படி அதிமுகவுக்கு 130 சீட் கிடைக்கும் என்கிற தகவலையும் சீனியர் மாஜி அமைச்சர்கள்கிட்ட ஷேர் செஞ்ச எடப்பாடி, “நாம ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ1,000-ன்னு கரெக்ட்டா எல்லா இடங்களிலும் கொடுத்துட்டோம்.. ஆனா திமுக சைடுல ஓட்டுக்கு பணம் சரியாக கொடுக்கலைன்னு சொல்றாங்க.. 5 வருஷ ஆட்சியில திமுக நிர்வாகிகளுக்கு பெருசா ஆதாயம் இல்லாததால அவங்க ஓட்டுக்கு பணம் தராம விட்டுட்டாங்க”ன்னு சொல்லி இருக்கிறார்” என்றனர்.

விஜய் தரப்புல என்ன மாதிரி ஆலோசனை நடத்துறாங்கன்னு விசாரிச்சோம்.. அவங்க என்ன சொல்றாங்கன்னா, “எலக்‌ஷனுக்கு முன்னாடியே விஜய்யோட அரசியல் ஆலோசகரான வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது 2026 தேர்தல் அப்படிங்கிறதே “3 J”-க்களை வெச்சுதான் இருக்கு.. அதாவது ஜீசஸ், ஜோசப் விஜய்.. ஜான் ஆரோக்கியசாமி.. இந்த 3 J-க்கள்தான் 2026 தேர்தல்ல ரொம்ப முக்கியம்னு சொன்னார்..

அதே மாதிரி, ’நாம 148 சீட் கன்பார்மா ஜெயிச்சுடுவோம்.. ஏன்னா இந்த சர்வே எடுத்தது அமெரிக்கா நிறுவனம்.. அவங்களுக்கு ஃபேக்ட் என்னவோ அதை மட்டும்தான் சொல்ல தெரியும்.. ஏன்னா அவங்களுக்கு லோக்கல் பாலிட்டிக்ஸ், விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை.. அதனால நாமதான் ஆட்சி அமைப்போம்”னும் சொல்லி இருந்தார்..

எலக்‌ஷனுக்கு பிறகு நடந்த ஆலோசனையிலும், “எல்லா கட்சிகளில்ல இருக்கிற மெஜாரிட்டியான குடும்ப ஓட்டுகள் நமக்கு வந்துருக்கு.. நிச்சயம் நம்ம ஆட்சிதான்”னு நம்பிக்கையா விஜய்கிட்ட சொன்னார்.

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதி தவெக நிர்வாகிகள்கிட்ட பேசுறப்ப, “நாம 125 சீட் வாங்கி ஜெயிச்சிடுவோம்.. நம்ம ஆட்சிதான் அமைய போகுது.. ஆனாலும் கவுண்ட்டிங் அன்னைக்கு கவனமா இருங்க.. திமுககாரங்க எதுவும் செய்வாங்க.. எச்சரிக்கையா இருங்க”ன்னு அட்வைஸ் செஞ்சிருக்கார்..

ஆமாய்யா… தவெக அமைச்சரவை பட்டியல் ஒன்னு வெளியாச்சே?

உம்ம கண்ணுலேயும் பட்டிருச்சா.. 29 பேர் கொண்ட விஜய்யின் அமைச்சரவை பட்டியல்னு ஒன்னு வைரலாகிடுச்சு.. அதை வெச்சு தவெகவுக்குள்ள ரணகளமே நடந்துகிட்டு இருக்கு.. என்னான்னா, “ஏன் ராஜ்மோகன் அண்ணன் பேரு அமைச்சரவையில இல்லை? அவர் பேசி பேசியே நம்ம கட்சியை வளர்த்திருக்காரே? எங்க மாவட்டத்துல ஒருத்தர் கூட அமைச்சரவை லிஸ்ட்ல இல்லையே?”ன்னு ஏகப்பட்ட சண்டை நடந்துகிட்டே இருக்குதுய்யா..

காரைக்குடியில போட்டி போட்ட சீமான் தன்னோட சகாக்கள்கிட்ட பேசும் போது, “நம்ம தொகுதியில காங்கிரஸுக்கும் எனக்கும்தான் போட்டி”ன்னு சொல்றார்.. அதோட ஒவ்வொரு பூத் நிலவரத்தையும் டீட்டெயிலா கேட்டு வெற்றி பெறுவோம்னு நம்பிக்கையோடு சொல்றார்.

திமுக கூட்டணியில காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் அடுத்த கட்ட வேலைக்கு ரெடியாகிட்டாங்க.. எலக்‌ஷன்ல சீட் கொடுக்காத திருப்போரூர் பாலாஜிக்கு விசிக பொருளாளர் பதவியையும் ஆளுநர் ஷாநவாஸுக்கு விசிக முதன்மை செயலாளர் பதவியும் கொடுத்திருக்கிறார் திருமா.

பாஜக லீடர்ஸ் என்ன செய்யுறாங்க?

பாஜக ‘வராகி’ன்னு ஒரு நிறுவனத்தை வெச்சுதான் எலக்‌ஷன் ஒர்க் செஞ்சாங்க.. களத்தில இருக்கிற பாசிட்டிவ், நெகட்டிவ்களை இந்த நிறுவனம்தான் சொல்லியது. இதை பத்தி விசாரிச்சப்ப, “விஜய்யால எங்க ஓட்டுகளுக்கு பாதிப்பு வருது.. பல தொகுதிகளில்ல பாஜக வேட்பாளர்கள் 3-வது இடத்துக்கு போக வாய்ப்பிருக்கு”ன்னு வராகி ரிப்போர்ட் சொல்லுது” என்கின்றனர்.

பாமக அன்புமணியும் கட்சி நிர்வாகிகள்கிட்ட ரெண்டு நாட்களாக போன் போட்டு, “விஜய்யால நம்ம ஓட்டு எதுவும் பிரியுதா? அய்யா (ராமதாஸ்) வேட்பாளர்கள் நம்மை ஓட்டை எவ்வளவு பிரிக்கிறாங்க?”ன்னு கேட்டுட்டு, “திமுகவுக்கு போற தலித் ஓட்டுதான் விஜய்க்கு போகும்.. நமக்கு பாதிப்பு இல்லை.. களம் சாதகமாவே இருக்கு”ன்னு நம்பிக்கையா சொல்லி இருக்கிறாரு..

ஸ்டாலின், எடப்பாடி, விஜய்னு எல்லாருமே ‘அடுத்த ஆட்சி நம்முடையது’ன்னு ரொம்பவே நம்பிக்கையா இருந்தாலும் மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு இல்லையா? மே 4-ந் தேதிதான் யாரோட நம்பிக்கை ஜெயிச்சதுன்னு தெரியும்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share