திமுகவை வீழ்த்த விழிப்புடன் இருப்போம்: எடப்பாடி பழனிசாமி சூளுரை!

Published On:

| By Kavi

புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு திமுக தயாராக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நாளில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருந்த போதிலும், மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 25) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 23.4.2026 அன்று தமிழ் நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, தமிழக வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவில் மிக அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

இரவு, பகல் பாராமல், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப் பதிவுநாள் வரை சுற்றிச் சுழன்று பணியாற்றிய அதிமுக, மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உட்பட நமது கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும், ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த பாரதப் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும், பிற மாநில முதலமைச்சர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கின்ற வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினர், எப்படி புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தோடு, அதற்கான முயற்சிகளை இந்தத் தேர்தலிலும் எடுப்பதற்குத் தயாராக உள்ளனர்.

தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 23.4.2026 அன்று முடிந்துள்ள நிலையில், 4.5.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி, வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று அதிமுகவுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திடும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் மிகவும் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும். இது, ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கோடான கோடி மக்களின் பேராதரவோடு, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்று, வெற்றிக் கனியை ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பொற்பாதங்களில் சமர்ப்பிப்போம்.

தமிழக மக்களைக் காப்பதற்காக, தீயசக்தி திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இதுதான், தன் நலன் பாராமல் நமக்காக உழைத்த, நாட்டுக்காக உழைத்த, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share