ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராக இருந்த ராகவ் சத்தா, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது டெல்லி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்த கட்சித் தாவல் தேசிய அளவில் பேசுபொருளாகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ‘Gen Z’ தலைமுறையினர் அவருக்கு எதிராக தந்துள்ள ‘டிஜிட்டல் தண்டனை’தான் தற்போது பரபரப்பான செய்தியாக மாறியுள்ளது.
ராகவ் சத்தாவுடன் ஆம் ஆத்மியின் 7 மாநிலங்களவை எம்.பிக்களும் நேற்று மொத்தமாக பாஜகவில் இணைந்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க, ஆம் ஆத்மி எம்பிக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பாஜகவில் இணைந்தனர்.
சமீப காலமாகவே அரசியல் அரங்கில் இளைஞர்களின் பிரதிநிதியாகப் பார்க்கப்பட்டவர் ராகவ் சத்தா. சில வாரங்களுக்கு முன்பு, ‘சீதா தோக்’ (seedhathok) என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம், ராகவ் சத்தா தனியாக ஒரு ‘Gen Z கட்சி’ தொடங்கினால் இளைஞர்களின் பெரும் ஆதரவு கிடைக்கும் என்றும், வேறு கட்சியில் இணைந்தால் வெறுப்பு மட்டுமே மிஞ்சும் என்றும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த யோசனையை ‘சுவாரஸ்யமானது’ என்று ராகவ் சத்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால், அவர் அந்த யோசனையைப் புறந்தள்ளிவிட்டு, பாஜகவில் இணைந்தது இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகவ் சத்தா பாஜகவில் இணைந்த அறிவிப்பு வெளியான அடுத்த கணமே, எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரை ‘Unfollow’ செய்தனர். இந்த எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த காலங்களில் பாஜகவை “ரவுடிகளின் கட்சி” என்று கடுமையாக விமர்சித்தவர் ராகவ் சத்தா. தற்போது அதே கட்சியில் அவர் இணைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பழைய வீடியோக்களையும், விமர்சனங்களையும், மீம்ஸ்களையும் உருவாக்கி இளைஞர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாகத் தாக்கி வருகின்றனர்.
அரசியல் தலைவர்களின் ஒவ்வொரு அடியையும் நுணுக்கமாகக் கவனிக்கும் ‘Gen Z’ தலைமுறையினர், தங்கள் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படும் தலைவர்களுக்கு உடனடியாக ‘டிஜிட்டல் தண்டனை’ வழங்குவது, இந்திய அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
