பாக்யராஜ் இறுதி மரியாதை இடத்தில் சில நிகழ்வுகளால் வேதனை.. ராதிகா

Published On:

| By Mathi

Radikaa Sarathkumar Upset Over Media Sensationalism at Bhagyaraj's Funeral

திரைக்கதை மன்னர், நடிகர் – இயக்குநர் கே. பாக்யராஜ்-க்கான இறுதி மரியாதையின் போது நடந்த சில நிகழ்வுகள் குறித்து நடிகை ராதிகா சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் மறைவு தொடர்பாக ராதிகா சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: 50 ஆண்டுகால நட்போடு பயணித்த நண்பருக்கு ஒரு பிரியாவிடை கொடுத்திருக்கிறோம். ஒரு சிறந்த படைப்பாளி, சிந்திக்க வைத்த எழுத்தாளர், கலையுலக நிகழ்வாக இருந்தாலும் சரி, குடும்ப நிகழ்வாக இருந்தாலும் சரி அவரோடு குடும்பசகிதமாக பழகிய நாட்களை நினைவுகூறுகிறோம்.

ADVERTISEMENT

அவரது இந்த திடீர் பிரிவு குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையில் இருக்கின்ற சக கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் பேரதிர்ச்சி. இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களுடன் குஷ்பு அவர்களின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிலையில், திடீரென மறைந்தார். இன்று அவர் நம்மோடு இல்லை என்ற எதிர்பாராத அதிர்ச்சி செய்தி எங்கள் மனதை எப்படி ஆழமான துக்கத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கிறது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

அவரை இழந்து தவிக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மனவேதனையோடு இறுதி மரியாதை செலுத்துகின்ற இடம் ஒரு அமைதி இல்லாமல், நிம்மதி இல்லாமல் மனதார அந்த ஆத்மாவிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் நடந்த சில நிகழ்வுகள் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்தது.

ADVERTISEMENT

சமூக வலைதள தாக்கம், உடனுக்குடன் செய்திகளை தந்து யார் முதலில் பிடிக்கிறார்கள், அழுகையை எந்த அளவிற்கு zoom செய்து காட்டி ஏற்ற வாசகம் போட்டு அதிக பார்வையாளர்களை கவர்கிறார்கள் என்று போட்டி போடுவதால், மனிதர்களின் யதார்த்தமான உணர்வுகளை மதிக்க இயலாமல், புரிதல் இல்லாத சமூகமாக இச்சமூகம் தள்ளப்படுகிறதோ என்ற ஐயத்துடன் யோசிக்க தோன்றுகிறது.

வருங்காலத்தில் இதே நிலை தொடர்வது தமிழர்களின் மானுட வாழ்வியல், பாரம்பரியம், கலாச்சாரத்திற்கு நல்லதல்ல. சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் ஒருபுறம் இருந்தாலும், அங்கு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள் சமூகத்தில் இனி நடைபெறாமல் தடுத்திட வேண்டும்.

ADVERTISEMENT

அரசும், திரைலயுகமும் இணைந்து, துக்கம் அனுசரிக்கும் இடங்களில் கண்ணியமும், மரியாதையும் காக்கும் வழிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்த அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு அரசு மரியாதை தந்த மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கும் நிகழ்விற்கு ஒத்துழைத்த அமைச்சர் பெருமக்களுக்கும், உரிய பாதுகாப்பு வழங்கி சிறப்பித்த தமிழக காவல்துறையினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share