திரைக்கதை மன்னனும், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் மற்றும் நடிகருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது விருப்பப்படி, மறைவிற்குப் பின் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.
மறைந்த பாக்யராஜ் அவர்களின் உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்குத் தமிழக முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சிப் பிரமுகர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, தனுஷ், சிவகார்த்திகேயன், பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, ராதிகா உள்ளிட்ட ஒட்டுமொத்தத் திரையுலகினரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்:
இதனைத் தொடர்ந்து இன்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வள்ளுவர் கோட்டம், கிரீன்வேஸ் சாலை, அடையாறு வழியாக இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தை நோக்கிச் சென்றது. வழிநெடுகிலும் பொதுமக்களும் ரசிகர்களும் திரண்டு வந்து அவரது உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை:
இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்ததும், தமிழக அரசின் சார்பில் காவல்துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் என். ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதை மற்றும் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
