இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்துச் சேவை நவம்பர் மாதத்தில் 16.4 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் வளர்ச்சி அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சர்வதேச விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இப்பிரிவில் இந்தியா தொடர்ந்து 39ஆவது மாதமாக இரட்டை இலக்கு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறைந்த கட்டணம் மற்றும் தரமான சேவை போன்ற காரணங்களால் இந்தியா தனது உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சர்வதேச அளவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் பயணிகள் வாயிலான வருவாய் 2016 நவம்பரை விட 2017 நவம்பரில் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல, விமான இருக்கைகளுக்கான தேவையும் 6.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் பயணிகள் வாயிலான வருவாய் 10.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இப்பிரிவில் சீனாவை (12.9%) தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயணிகள் தேர்ந்தெடுத்துப் பயணிக்கும் அளவுக்கு விமானச் சேவை மேம்பட்டுள்ளதோடு, டிக்கெட் கட்டணங்களும் குறைவாக இருப்பதால் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருப்பதாக சர்வதேச விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பின் பொது இயக்குநரான அலெக்ஸாண்ட்ரே ஜூனியாக் கூறுகிறார். 2018ஆம் ஆண்டிலும் இத்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரிக்கும் என்று ஜூனியாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.









