பச்சைக்கொடி பார்ட்னர்! உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருக்க வேண்டிய ஆகச்சிறந்த குணங்கள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

qualities of a healthy romantic partner green flags

சினிமாவில் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கையில் நாம் வாழும் காதல் வேறு. பல நேரங்களில் அதீத பாசமழை பொழிவதுதான் சிறந்த காதல் என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், ஒரு நீண்ட கால, நிம்மதியான வாழ்க்கைக்கு நமக்குத் தேவை ஒரு ஆரோக்கியமான பார்ட்னர் (Healthy Romantic Partner) அல்லது உளவியல் ரீதியாகச் சொன்னால் ‘கிரீன் பிளாக்’ (Green Flag) மனிதர்.

உங்களது பார்ட்னர் உங்களுக்கான சரியான நபர் தானா, அவரிடம் இருக்கும் குணங்கள் உங்களது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமா என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் முக்கிய ஆரோக்கியமான குணங்கள் இதோ!

ADVERTISEMENT
பரஸ்பர மரியாதையும் எல்லைகளை மதிப்பதும்

ஒரு ஆரோக்கியமான உறவின் மிக முக்கியமான அஸ்திவாரம் – மரியாதை. அவர் உங்களை ஒரு மனிதராகவும், உங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் மதிக்க வேண்டும்.

  • பர்சனல் ஸ்பேஸ்: உங்களுக்கு என்று இருக்கும் பர்சனல் ஸ்பேஸ் (Personal space), உங்களது நண்பர்கள், மற்றும் உங்களது குடும்பத்தினருடன் நீங்கள் நேரத்தைச் செலவிடுவதை அவர் தடுக்க மாட்டார்.
  • உங்களது ‘நோ’ (No) என்ற வார்த்தைக்கு மதிப்பளித்து, உங்களது எல்லைகளை (Boundaries) மீறாமல் இருப்பதே ஒரு ஆரோக்கியமான துணையின் முதல் அடையாளமாகும்.
மனம் திறந்த மற்றும் நேர்மையான பேச்சு

எந்தவொரு ஒளிவுமறைவும் இன்றி, தன் மனதில் உள்ளதை உங்களிடம் நேர்மையாகப் பகிர்ந்துகொள்ளும் குணம் அவரிடம் இருக்கும்.

ADVERTISEMENT
  • ஆரோக்கியமான விவாதம்: சண்டைகளோ அல்லது கருத்து வேறுபாடுகளோ வரும்போது, கோபப்பட்டு கத்துவதோ அல்லது பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொள்வதோ (Silent treatment) செய்யாமல், அமைதியாக அமர்ந்து பேசிப் பிரச்சினையைத் தீர்க்க முயல்வார்.
  • “நீ செய்ததுதான் தப்பு” என்று உங்களைக் குற்றம் சாட்டாமல், “எனக்கு இந்த விஷயம் கஷ்டமாக இருந்தது” என்று தனது உணர்வுகளைப் பக்குவமாக வெளிப்படுத்துவார்.
உங்களது தனிப்பட்ட வளர்ச்சிக்குத் தோள் கொடுப்பது

ஒரு நல்ல பார்ட்னர் உங்களை எப்போதுமே தனக்குக் கீழே வைத்திருக்க நினைக்க மாட்டார். உங்களது லட்சியங்களுக்கும், உங்களது வேலைக்கும் அவர் ஒரு தூணாகப் பக்கபலமாய் நிற்பார்.

அன்பின் உன்னத நிலை: நீங்கள் வாழ்க்கையில் இன்னும் பெரிய உயரங்களைத் தொட வேண்டும் என்று அவர் ஆசைப்படுவார். உங்களது வெற்றிகளைக் கண்டு பொறாமைப்படாமல், உங்களை விட அதிகமாக அவரே அதைக் கொண்டாடுவார். அதே நேரத்தில், நீங்கள் ஏதேனும் தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டி உங்களைத் திருத்தும் பக்குவமும் அவரிடம் இருக்கும்.

ADVERTISEMENT
உணர்வுப்பூர்வமான மனமுதிர்ச்சி

அவருக்குத் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்திருக்கும் (Emotional Maturity). தன் வாழ்க்கையில் அல்லது அலுவலகத்தில் நடக்கும் விரக்திகளையும் கோபத்தையும் உங்களது தலைமேல் கொட்டித் தீர்க்க மாட்டார்.

  • நம்பகத்தன்மை: இக்கட்டான சூழ்நிலைகளிலும், உங்களது கஷ்ட காலங்களிலும் உங்களைக் கைவிடாமல், “நான் இருக்கிறேன்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைத் தருவார்.
  • அவரிடம் உங்களால் எவ்விதப் பயமும் இன்றி, உங்களது பலவீனங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
கடந்த காலத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம்

உங்களது கடந்த கால வாழ்க்கையை (Past life) நினைத்து அவர் உங்களை எப்போதும் சந்தேகப்படவோ அல்லது அதைக் குத்திக் காட்டிக் பேசவோ மாட்டார்.

  • உங்களது கடந்த காலத் தவறுகளையும், காயங்களையும் ஏற்றுக்கொண்டு, தற்போதைய உங்களை அப்படியே நேசிப்பார்.
  • உங்களை மற்றொரு நபருடன் ஒப்பிட்டுப் பேசாமல், நீங்களாக இருப்பதையே அவர் அதிகம் விரும்புவார்.

நன்றி: ஸ்ரீவித்யா மாரியப்பன், எழுத்தாளர் மற்றும் தொடர்பாடல் நிபுணர்

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share