சளி, இருமலை விரட்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க (Boost Immunity) வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கக்கூடிய 5 பானங்கள் குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் முடிந்து பருவம் மாறத் தொடங்கிவிட்டது. நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடிக்கடி மழையும் பெய்து வருகிறது. வானிலை மாற்றங்கள் காரணமாக பலருக்கு சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். குறிப்பாக சிலர் அடிக்கடி சளி, இருமல் (cold and cough) தொந்தரவு காரணமாக அவதிப்படுவதையும் காண முடிகிறது. இதற்காக அடிக்கடி மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, இயற்கை முறையில் சளி, காய்ச்சலை கட்டுப்படுத்த வழி உள்ளதா என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கும்.
ஆனால், நமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நாம் சளி, இருமலை போக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. நம் வீட்டில் உள்ள பொருட்கள் சமையலுக்கு மட்டுமின்றி மருந்துகளாகவும் சில நேரங்களில் மாறிவிடும். சளி, இருமலை போக்கும் சில பானங்களை எப்படி செய்வது, அதன் பயன்கள் என்னவென்பது குறித்துப் பார்க்கலாம்.
இஞ்சி எலுமிச்சை டீ
மெல்லியதாக நறுக்கிய இஞ்சியைத் தண்ணீரில் போட்டு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது இஞ்சி எலுமிச்சை டீ ரெடி. பிறகு வடிகட்டி அருந்தலாம். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு (Benefits of ginger lemon tea) மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், அதை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதாவது, இந்த தேநீர் நோய் எதிர்ப்புச் சக்திக்கு ஆதாரமாகச் செயல்படுகிறது. மேலும் இது சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராட உதவுகிறது.
துளசி மற்றும் சோம்பு தேநீர்
நம்மில் பலரின் வீட்டிலும் ஒரு துளசிச் செடி கட்டாயம் இருக்கும்.கிராமங்களில் துளசி செடி அதிகமாகவே வளர்ந்திருக்கும். துளசிக்கு தனக்கே உரிய பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் நோய் எதிர்ப்பு ஹார்மோன்களைத் தூண்டும் பண்புகள் அடங்கியுள்ளன. ஆகவே, இது சுவாச நோய்த்தொற்றுகளை (Tulsi cures colds) எதிர்த்துப் போராடுகிறது. துளசி மற்றும் சோம்பு டீ அருந்துவதால் உடல் நல நன்மைகளைப் பெறலாம். துளசி மற்றும் சோம்பு-வை கொதிக்கும் நீரில் இடவும். நன்றாக அதை வடிகட்டி அதில் தேன் சேர்த்தால் துளசி – சோம்பு தேநீர் ரெடி. இதைக் குடித்தால் சளி, இருமல் குறைந்துவிடும்.
மலை நெல்லிக்காய் பானம்
மலை நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ( Boost Immunity) அதிகரிப்பது மட்டுமல்லாமல், நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. நெல்லிக்காயை வைத்து வீட்டிலேயே சிறந்த பானத்தைத் தயாரிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் 3 – 4 தேக்கரண்டி மலை நெல்லிக்காய் சாற்றைக் கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை அருந்தலாம். அப்படி அருந்தினால் சளி, இருமல் நம்மை விட்டு ஓடியேபோய்விடும்.
லவங்கப்பட்டை பானம்
சளி மற்றும் காய்ச்சலை லவங்கப்பட்டையும் தடுக்க உதவுகிறது. லவங்கப்பட்டையில் (Benefits of cinnamon) பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. லவங்கப்பட்டை பானம் தயாரிக்க, ஒரு துண்டு இலவங்கப்பட்டையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சுவைக்கு ஏற்ப தண்ணீரில் தேன் சேர்த்துக் குடிக்கலாம். இந்தப் பானம் அழற்சி எதிர்ப்புப் பொருளாகவும் செயல்படுகிறது.
