ADVERTISEMENT

ஆறு வருடம் டிமிக்கி… அதிர வைக்கும் இணைய மோசடி நெட்வொர்க்… விசாரணையில் கிடைத்த பகீர் தகவல்கள்!

Published On:

| By vanangamudi

கடந்த ஆறு ஆண்டுகளாக 14 மாநிலங்களில் இணைய வழியில் மோசடி செய்த கும்பலை புதுவை சைபர் கிரைம் போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர். puducherry cyber crime police arrest

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதுச்சேரியில் கட்டுமான பணி செய்துவரும் சேதுராமன் என்பவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசுக்கு ஆன்லைனில் புகார் ஒன்றை அளித்தார்.

ADVERTISEMENT

அந்தப் புகாரில், “யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் VIZAG STEEL என்ற நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து மார்க்கெட் விலையை விட மிக குறைவாக TMT கம்பி தருவதாக சொன்னார்கள். இதனையடுத்து அவர்களின் ஜி.எஸ்.டி நம்பர், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கொடுத்தனர்.

பின்னர், குறைந்த விலைக்கு டிஎம்டி கம்பிகள் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ரூ.30,90,700 பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தினேன். பணம் செலுத்திய ஐந்து நாட்களாக தொலைபேசி எண்ணையும் முகநூல் பக்கத்தையும் தொடர்புகொள்ள முடியவில்லை” என்று புகார் கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

இதனையடுத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க குற்ற எண் 104/2024 கீழ் வழக்குப்பதிவு செய்து இஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், VIZAG STEEL என்ற போலியான முகநூல் பக்கத்தை உருவாக்கி, மோசடியில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர். பின்னர் சைபர் கிரைம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பல ஆதராங்களை திரட்டினர்.

ADVERTISEMENT

இதில் மோசடியில் ஈடுபட்டது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகுல் குமார் சிங், பிகார் மாநிலத்தை சேர்ந்த உத்தம் விஷால் குமார், ராயுஷன் குமார், அபிஷேக் குமார், கர்நாடகாவை சேர்ந்த தயாந்த் ஆகிய ஐந்து பேர் என்பது தெரியவந்தது. இவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், இவர்களிடமிருந்து 50 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், லேப்டாப், டேப் மற்றும் 34 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், பாட்னாவில் உள்ள நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்தி புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.

இந்த இணையவழி மோசடி கும்பலை எப்படி பிடித்தீர்கள்? இந்த மோசடியில் அரசு அதிகாரிகளின் பங்கு ஏதேனும் இருந்ததா? என்று ஸ்பெஷல் புலனாய்வு டீமிடம் விசாரித்தோம்…

“குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ராயுஷ் குமார் சிங், உத்தம் விஷால் குமார் ஆகிய இருவரும் தான் முக்கிய குற்றவாளிகள். இந்த மோசடி சம்பவத்தை ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல நடத்தியுள்ளனர்.

இவர்களை எந்த மாநிலத்தை சேர்ந்த போலீசாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கில் புதுவை அரசின் முழு ஒத்துழைப்புடன் சைபர் கிரைம் எஸ்.பி பாஸ்கர் தலைமையில் கடந்த 9 மாதங்களாக இரவும் பகலுமாக துப்பு துலக்கினோம். அதில் ஒரு முக்கிய க்ளு எங்களுக்கு கிடைத்தது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு இளைஞர் இந்த கும்பலுக்கு போலியான வெப்சைட் டிசைன் மற்றும் கம்பெனி லோகோ செய்து கொடுத்து வந்துள்ளார். இந்த விஷயத்தை முதலில் கண்டுபிடித்தோம். இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநில போலீசார் உதவியுடன் அந்த நபரை கைது செய்ய சென்றோம். போலீசார் உத்தரபிரதேசம் சென்ற மறுநாள் அந்த நபருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனால் ஊர் மக்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தனர். அதையெல்லாம் சமாளித்து அந்த மணமகனை கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்தோம். அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவரை நாங்கள் அப்ரூவராக மாற்ற இருக்கிறோம்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ‘ஒரு வெப்சைட்டுக்கு லோகோ டிசைன் செய்து கொடுத்தால் 25 ஆயிரம் கொடுப்பார்கள். நான் லைசன்ஸ் பெற்ற வெப்சைட் டிசைனர். எனக்கு திருமணம் நடக்கப்போகிறது. நான் அனைத்து தகவல்களையும் அவர்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் என்ற தகவலையும் சொல்லி விடுகிறேன்’ என்று சொன்னது போலவே செய்தார்.

பின்னர் இணையவழி மோசடியில் ஈடுபட்டர்களை கண்டுபிடிக்க மத்தியபிரதேச மாநிலத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு சிலரிடம் விசாரித்தபோது, இணையவழி குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று விட்ட தகவல் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு போலீசார் விரைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து எஸ்கேப்பாகிய அந்த கும்பல் பிகார் சென்றனர். ஸ்பெஷல் டீம் அவர்களை டிரேஸ் செய்து பிகார் விரைந்தனர். கடைசியாக, பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அந்த கும்பல் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனடியாக, பாட்னா போலீசாருக்கு தொடர்புகொண்டு அவர்களது உதவியுடன் இணையவழி மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்தோம்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘மொத்தம் 18 டீமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இதில் ஒரு டீம், தனிநபர் வங்கி கணக்குகளை சேகரித்து கொடுப்பார்கள். மற்றொரு டீம் போலியான ஐடிகளை வைத்து சிம் கார்டு வாங்குவார்கள்,

வங்கி கணக்குகளை பராமரிப்பது, வங்கி பணத்தை ஏடிஎம்களில் சென்று எடுப்பது, பணத்தை வசூலிப்பது, கால் சென்டர் நடத்துவது, ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்வது, சைபர் கிரைம் முடக்கத்தை தவிர்ப்பது என மொத்தம் 18 டீம் இயங்கி வந்தது. எங்களிடம் வேலை பார்க்கும் அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுத்தோம்.

பாட்னாவை மையமாக வைத்து இந்த மோசடியை அரங்கேற்றினோம். 2019-ஆம் ஆண்டு முதல் இந்த மோசடியை செய்து வருகிறோம். போலீஸால் எங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் நாங்கள் தொடர்ந்து மோசடிகளை அரங்கேற்றி வந்தோம்’ என்று வாக்குமூலம் கொடுத்தனர்.

’போலீஸ் உங்களை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு எப்படி மோசடி செய்தீர்கள்?’ என்று விசாரித்தபோது,

’சிம் கார்டு, செல்போன், லேப்டாப், டேப் ஆகிய அனைத்து சாதனங்களையும் ஒரு ஆபரேஷனுக்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். ஒரு ஆபரேஷனில் ஐந்து முதல் ஆறு பேரை ஏமாற்றுவோம். இதில் 50 லட்சத்திற்கும் குறையாமல் பணம் கிடைக்கும். பின்னர் அந்த ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்ட அனைத்து சாதனங்களையும் அழித்து விடுவோம்.

நாங்கள் ஒரு மாநிலத்தில் தொடர்ந்து இருக்க மாட்டோம். எங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்போம்’ என்று தெரிவித்தனர்.

இவர்களிடம் கைப்பற்றப்பட்ட சாதனங்களை ஆராய்ந்தபோது, 5,400 பேரை மோசடி செய்து ஏமாற்றிய ஷாக் தகவல் எங்களுக்கு கிடைத்தது. ஏமாற்றப்பட்டவர்களை சிலரிடம் தொடர்புகொண்டு பேசினோம். அவர்களும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

பிகார் மாநிலத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள மேனேஜர் ஒருவர் இந்த கும்பலின் மோசடி பணங்களை பரிவர்த்தனை செய்ய உடந்தையாக இருந்திருக்கிறார். இவர்கள் கொடுத்த வாக்குமூலமும் சில ஆதாரங்களையும் வைத்து இந்தியன் வங்கி மேலாளரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக இணைத்திருக்கிறோம். அவரையும் கைது செய்து விசாரிக்க, முடிவெடுத்திருக்கிறோம்.

மேலும், அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் இவர்களை பற்றி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் மீது மகாராஷ்டிராவில் இணைய மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இவர்களை விசாரிக்க மகாராஷ்டிரா மாநில போலீசார் இன்று (ஜூலை 4) புதுவை வந்துள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு மாநில போலீசாரும் இவர்களை விசாரிக்க உள்ளனர்.

டிஎம்டி கம்பி விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து 14 கோடி மோசடி செய்ததற்கான ரசீது கிடைத்திருக்கிறது. அதனால் இந்த வழக்கு தொடர்பாக, வருமான வரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். இவர்கள் மீது 14 மாநிலங்களில் வழக்குகள் இருந்தாலும் இந்த வழக்கை மிகவும் சவாலாக எடுத்துக்கொண்டு மோசடி செய்தவர்களை கண்டுபிடித்திருக்கிறோம்” என்றனர்.

புகார்தாரர் சேதுராமனின் பிண்ணனி? குறித்து விசாரித்தோம்…

“புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எம்.பி-யுமான வைத்திலிங்கத்தின் நெருங்கிய உறவுக்காரர் தான் சேதுராமன். அதனால் இந்த வழக்கை மிகவும் சீரியஸாக எடுத்து விசாரிக்க ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கேட்டுக்கொண்டனர்” என்றனர்.

ஆறு வருடங்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த இணைய வழி மோசடி கும்பலை புதுவை போலீசார் கைது செய்ததை பல மாநில போலீசாரும் பாராட்டி வருகின்றனர். puducherry cyber crime police arrest

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share