தமிழகத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் தீவிரம்- பாஜகவும் கை கோர்க்கிறது!

Published On:

| By Mathi

Protests intensify in Karnataka against Tamil Nadu; BJP joins hands

தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாண்டியாவில் பாஜகவும் நாளை தமிழ்நாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவு. இதனை ஏற்க முடியாது என கர்நாடகா அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது.

ADVERTISEMENT

கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், “எங்கள் மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் காவிரி நதிநீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியாது” என்கிறார். மேலும் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க கர்நாடகாவின் அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை டி.கே.சிவகுமார் கூட்டியுள்ளார்.

கர்நாடகா துணை முதல்வர் பரமேஸ்வரா, “காவிரி ஒழுங்காற்றின் முடிவு சரியானது அல்ல. எங்கள் அணைகளில் நீர் இருந்தால் தமிழ்நாட்டுக்காக கேட்காமலேயே கொடுத்துள்ளோம்” என்றார்.

ADVERTISEMENT

இதனிடையே, தமிழ்நாட்டுக்கு காவிரி நதிநீரை திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மண்டியா மாவட்ட விவசாயிகள் நேற்று 2-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர்.

மண்டியா டவுன், கிருஷ்ண ராஜ சாகர் அணை, மைசூரு மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூரு தெற்கு மாவட்டம் ராமநகர் டவுனிலும் போராட்டம் நடந்தது.

ADVERTISEMENT

சிக்பள்ளாபூரில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் கர்நாடகா ரக்‌ஷண வேதிகா அமைப்பினரும் மைசூரு வங்கி சர்க்கிளில் கன்னட சலுவாளி வாட்டாள் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். தலைகளில் காலி குடங்களை வைத்தபடியும் சாலைகளில் படுத்து உருண்டும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனிடையே, தமிழ்நாட்டுக்கு எதிராக மண்டியாவில் நாளை பாஜகவும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. கர்நாடகா மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ” கர்நாடகா விவசாயிகள் வாழ்க்கையுடன் முதல்வர் டி.கே. சிவகுமார் விளையாடுகிறார். தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என வலியுறுத்தி மண்டியாவில் நாளை வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்துவோம்” என்றார்.

இதனிடையே முதல்வர் விஜய், ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூரு பேச்சுவார்த்தைக்கு வரக் கூடும் என்பதால் கர்நாடகா சட்டசபையின் மாநாட்டு கூடம் சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share