இனக்குழுக்களிடையே 2 ஆண்டுகளாக மோதல் நீடித்து வரும் மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்டம்பர் 13) பயணம் மேற்கொள்கிறார்.
மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக் குழுக்களிடையே 2023-ம் ஆண்டு மோதல் வெடித்தது. இந்த மோதலில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
குக்கி இன மக்கள் தங்களது பகுதிகளை ஒருங்கிணைத்து சுயாட்சி நிர்வாக கவுன்சில் அமைக்க கோரி ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய வன்முறைகள் நிகழ்ந்த மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்லாதது ஏன்? என எதிர்க்கட்சிகள் இடைவிடாமல் கேள்வி எழுப்பின. நாடாளுமன்றத்தையும் முடக்கின.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை, மணிப்பூர் மாநிலத்துக்கு செல்கிறார். அம்மாநிலத்தின் தலைநகர் இம்பால் காங்லா கோட்டை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். இதனைத் தொடர்ந்து சுராசந்த்பூர் பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார்.
முன்னதாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற போராட்டத்தை சில இனக்குழுவினர் நடத்தி வந்தனர். மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்தப் போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது மணிப்பூர் மாநிலத்தில் ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இதனிடையே பிரதமர் மோடி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் சுராசந்த்பூரில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
