கல்குவாரிகளில் சோதனை நடத்த அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

தமிழகம் முழுவதும் கல்குவாரிகளில் சோதனை நடத்த அமைச்சர் டி.கே.பிரபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கனிமவளத் துறை சார்பில் 2000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்த கல்குவாரிகளில் அரசு அனுமதி அளித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

அதே போல, மத்திய அரசின் சியா (SEIAA) கமிட்டி, கல்குவாரிகளில் எந்த அளவு கற்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் கல்குவாரிகளை கண்காணிக்கும் சேப்டி மைண்ஸ் எனப்படும் கண்காணிப்பு குழுவினர் முறையாக கல்குவாரிகளை கண்காணிக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் புதுதாக பொறுப்பேற்றுள்ள இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், “தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து கல்குவாரிகளை அந்தந்த மாவட்ட கனிமவளத் துறையினர் ஆய்வு செய்து, கல்குவாரிகளில் அரசிடம் பெறப்பட்ட அனுமதி ஆணைப்படி கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா என்பதனையும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா என்பதனையும், உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும், அரசு அனுமதியின்றி பல இடங்களில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளதை தொடர்ந்து அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்து, கல்குவாரிகள் விதிகளுக்குட்பட்டு செயல்படுகின்றனவா என்பது குறித்தும், சட்டவிரோதமாக இயங்குகின்றனவா என்பது குறித்தும், பல்வேறு விவரங்களை உடனடியாக திரட்ட கனிமவளத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வின் அடிப்படையில், அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டியெடுத்த கல்குவாரிகளை உடனடியாக மூடவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share