சட்டமன்ற தேர்தல்.முடிந்த பின்னர் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (மே.31) நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், ‘நாம் நினைத்திருந்தால் விஜய்யை பார்த்திருக்க முடியாதா? அமைச்சர் பதவிக்காக ஓடுகிறார்கள். ஆனால் நான் நினைத்திருந்தால் விஜயே வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். ஆனால் இதற்கெல்லாம் ஆசைப்படும் கட்சி தேமுதிக கிடையாது” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு புதிய அரசு அமைந்தால் அதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால், தமிழகத்தில் தற்போதைய சூழலில் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, மேகதாது விவகாரம், மின்வெட்டு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற முக்கியப் பிரச்சனைகள் இருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் எங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தேமுதிக எப்போதும் பதவிக்கோ, பணத்துக்கோ, சோபா செட்டுக்கோ ஆசைப்பட்டு பேரம் பேசும் கட்சி அல்ல. கூட்டணி தர்மத்திற்கு உட்பட்டு விசுவாசமாகச் செயல்படும் கட்சி.
விஜய் உள்ளிட்ட மற்றவர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்புகள் இருந்தும், கூட்டணி தர்மத்தை மதித்து அவ்வாறு செய்யவில்லை.
கடந்த காலங்களில் அதிமுக இக்கட்டான சூழலில் இருந்தபோது, சுயநலத்திற்காக மற்றவர்கள் விலகியபோதும் தேமுதிக மட்டுமே கூட்டணி தர்மத்தோடு உறுதியாக நின்றது.
தற்போதைய தேர்தல் முடிவுகள் என்பது சோசியல் மீடியா மற்றும் கவர்ச்சியால் உருவான ஒரு மாயை.
கொளத்தூரில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் முதலமைச்சரே தோல்வியடைந்தது போன்ற ஆச்சரியங்கள் இதில் நடந்துள்ளன” என்றார்.
அவரிடம் ,புதிய அரசு அமைக்கும் போது எம்எல்ஏ ஆதரவுக்காக உங்களை அணுகினார்களா? ஒரு வார்த்தை நான் சொல்லியிருந்தா துணை முதலமைச்சர் கூட கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கு என்று சொல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு,
“அந்த ஒரு வார்த்தையிலேயே எல்லாத்துக்குமான அர்த்தம் இருக்கிறது. கேப்டன் சினிமா துறையில் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் சப்போர்ட் பண்ணி, அவருக்கு ‘செந்தூரபாண்டி’ என்ற திரைப்படத்தை நடித்துக் கொடுத்து, அவருக்கு மிகப்பெரிய ஒரு துவக்கத்தை ஏற்படுத்தியவர்.
அதனால்தான் ‘எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் ‘ என்பதை விஜய் எல்லா இடத்திலும் சொல்வார். அதைத்தான் நானும் ‘என் தம்பி, என் அன்பு தம்பி விஜய் ‘ என்றுதான் அனைத்து பிரச்சாரத்திலேயும் எல்லா பேட்டியிலேயும் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
அப்படி இருக்கும் பொழுது, மற்றவர்களை சந்தித்து ஆதரவு கேட்பவர்கள் தேமுதிகவிடம் கேட்காமல் இருப்பாங்களா என்ற கேள்வியை உங்ககிட்ட கேட்கிறேன்.
அதனால இதற்கெல்லாம் நான் முழுசா ஓப்பனா பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தேமுதிக ஒரு நிலைப்பாடை எடுத்தால், ஒரு கூட்டணியை நாங்க மதித்து தேர்தலில் ஒரு கூட்டணி பக்கம் நின்றால், அதில் நாங்கள் உறுதியாக இருப்போம். தேர்தலுக்கு முன்பாக ஒரு கூட்டணி, தேர்தல் முடிந்த உடனே ஒரு நிலைப்பாடு என்ற நிலையை என்றைக்கும் தேமுதிக எடுக்காது, அதுதான் இதற்கான விடை” என்று கூறினார்.
