விஜய் எங்கள் வீட்டு பிள்ளை – பிரேமலதா விஜயகாந்த்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

விஜய் எங்களுக்கு புதியவர் இல்லை. கேப்டனோடு பயணித்தவர் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் இருந்த தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், வெற்றி சான்றிதழை இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு பிரியாவிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்களித்த விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியில் தேமுதிக பங்கேற்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, “நாங்கள் மதச்சார்பற்ற கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை. அவருக்கு வாழ்த்துக்கள். புதிதாக ஆட்சி அமைக்க உள்ளவர்களுக்கும் வாழ்த்துக்கள். விஜய் எங்களுக்கு புதியவர் இல்லை. கேப்டனோடு பயணித்தவர். விஜய் வந்துள்ளார். அவர் நல்லபடியாக ஆட்சி செய்யட்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நான் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்” என்றார். மேலும், “திமுக தலைவர் ஸ்டாலினை நாளை சந்திக்க உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டு அறிக்கையில்,” மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தல் களத்தில் கூட்டணி தர்மத்தை மதித்து மிகச் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

தோல்வியுற்ற வேட்பாளர்கள் யாரும் மனம் தளராமல் இருக்க வேண்டும். நமக்கான எதிர்காலம் உறுதியாக உள்ளது. 2026 தேர்தல் ஒரு மாயை போன்றது; இதில் வெற்றியும் தோல்வியும் யாராலும் கணிக்க முடியாத வகையில் முடிவுகள் அமைந்துள்ளன. இது நிரந்தரமானது அல்ல. மாற்றம் மட்டுமே மாறாதது என்பதால் உறுதியுடன் இருந்து எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை தைரியமாக சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும், மாவட்ட கழக செயலாளர்களுக்கும், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மதச்சார்பற்ற வெற்றி கூட்டணியில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share