தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றியடைந்துள்ள நிலையில் 59 இடங்களில் வெற்றி பெற்று திமுக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதைதொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தலில் ஜனநாயகத்தின் தீர்ப்பு என்பது மக்களின் தீர்ப்பு. மக்கள் ஒரு கட்சிக்கு (திமுக-வை விட அதிக இடங்களை) வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.
தவெக ஆட்சி அமைக்க தேவையான அதரவு குறித்த கேள்விக்கு, கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் நாங்கள் மிக உறுதியுடன் திமுக-வோடு இருக்கிறோம். தொடர்ந்து இருப்போம்.
இந்தக் கூட்டணியில் இருக்கும் எந்தவொரு கட்சியும் கூட்டணியை விட்டு விலகுவதற்கான எண்ணத்தையோ அல்லது அசைவையோ காட்டவில்லை. மற்ற கட்சிகளுடன் யாராவது தொடர்பு வைத்துள்ளார்களா என்பது பற்றி எங்களுக்குத் தெரியவில்லை, அவ்வாறு வைக்கவும் முடியாது.
காங்கிரஸ் கட்சி போன்ற மற்ற கட்சிகளின் உள்விவகாரங்கள் குறித்து நான் பொதுவெளியில் கருத்து கூற விரும்பவில்லை. இந்தக் கூட்டணி நீடிக்கும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கை உள்ளது; காலப்போக்கில் காலம் அதை நிரூபிக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆட்சிக் காலத்தில் அரும்பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அந்தச் சாதனைகளைத் தொடர வேண்டிய கடமை அடுத்து அரசு அமைக்கும் கட்சிக்கு உள்ளது; அவர்கள் அதைத் தொடர வேண்டும் என்பதே எங்களது கருத்து.”என தெரிவித்தார்.
