இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹீரோக்கள் நடித்த படங்களைப் பார்ப்பதென்பது சிறுவயதில் அலாதியான இன்பத்தைத் தரும். ஞாயிற்றுக்கிழமைகளில் தூர்தர்ஷனின் தரைவழி தமிழ் ஒளிபரப்பில் வெகு அரிதாக அப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும்.
பிரபு, பிரேம் நடித்த ‘வெற்றிக்கரங்கள்’ படத்தை அப்படித்தான் பார்க்க நேர்ந்தது. ராம்கி, அருண் பாண்டியனை ஒன்று சேர்த்து பார்க்கச் செய்த ‘இணைந்த கைகள்’ அப்படித்தான் வசீகரித்தது.
அந்த வரிசையில் ‘ஜல்லிக்கட்டு’, ‘வெற்றி விழா’, ‘உரிமை கீதம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வெகுசில படங்களே அமைந்தன.
அதன் வழியே முன்னணி ஹீரோக்கள் ஒன்றுசேர்ந்து நடிக்க மாட்டார்கள் அல்லது அப்படியே நடித்தாலும் யாராவது ஒருவர் பக்கமாகத் திரைக்கதை சாய்ந்துவிடும் என்ற எண்ணம் பின்னாட்களில் தொற்றிக் கொண்டது.
அந்த நியதியை மீறிய படங்களில் ஒன்று, மணிவண்ணன் திரைக்கதை வசனமெழுதி இயக்கிய ‘சின்னதம்பி பெரியதம்பி’. ’பாட்டுக்கு நான் அடிமை’ போன்ற படங்களை இயக்கிய சண்முகப்ரியன் இப்படத்தின் கதையை எழுதியவர்.
இந்த படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இன்றைக்கும் பிரபு, சத்யராஜின் ரசிகர்கள் பார்த்து மகிழத்தக்க வகையில், அன்றைக்குப் பெற்ற அதே மன எழுச்சியை மீண்டும் உருவாக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது இப்படம்.
இரு சகோதரர்கள்
சின்னதம்பி (பிரபு), பெரியதம்பி (சத்யராஜ்) இருவரும் பாட்டியின் (காந்திமதி) அரவணைப்பில் வாழ்கின்றனர். அனாதரவாக இருந்த இவர்களை அப்பெண்மணியே வளர்க்கிறார்.
பெரிதாகக் கல்வி கற்காத இவ்விருவரும் ஊரைச் சுற்றுவது, வம்பு வளர்ப்பது, அவ்வப்போது வேலை செய்வது என்றிருக்கின்றனர்.
ஒருநாள் பாட்டியின் மகன் நகரத்தில் இருந்து கடிதம் அனுப்புகிறார். அதில், முக்கியமான வேலையாகக் கிராமத்து வீட்டுக்கு வருவதாகக் கூறியிருக்கிறார்.
அதனை அறிந்ததும், தனது பேத்தியை சின்னதம்பி அல்லது பெரியதம்பிக்குத் திருமணம் பேசி முடிக்க வருவதாக எண்ணுகிறார் அந்த பெண்மணி.
அவர் சொல்வதை உண்மை என்று நம்பி சின்னதம்பியும், பெரியதம்பியும் மாமா மகளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஆனால், வீட்டுக்கு வரும் அந்த மனிதர் தனது மகள் கவிதாவுக்கு (நதியா) ஆலை உரிமையாளர் மகன் முரளி (நிழல்கள் ரவி) உடன் திருமணம் நிச்சயித்திருப்பதாகக் கூறுகிறார்.
சின்னதம்பி, பெரியதம்பி இருவரும் அந்த ஆலையில்தான் வேலை செய்து வருகின்றனர். அதைக்கேட்டு மன வருத்தம் அடையும் பாட்டி தனது மகனையும், மருமகளையும் ‘நாசமாகப் போக’ என்று சபிக்கிறார். அதனால், கோபமுறும் மூவரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
சில நாட்கள் கழித்து, ஆலையிலுள்ள சில பணியாளர்களைத் திருமண மண்டபத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக அழைத்துச் செல்கின்றனர். அவர்களோடு சின்னதம்பியும், பெரியதம்பியும் பயணிக்கின்றனர்.
திருமண நாளன்று கவிதாவின் பெற்றோர் ஒரு விபத்தில் மரணமடைகின்றனர்; அப்போதுதான், அவர்கள் எவ்வளவு பெரிய கடனாளிகள் என்று வெளியுலகுக்குத் தெரிய வருகிறது.
அவர்கள் வசமிருந்த சொத்துகள் அனைத்தும் பறிபோக, ஒரேநாளில் வீதிக்கு வருகிறார் கவிதா. கல்யாணம் நின்றுபோகிறது.
நிர்க்கதியாக நிற்கும் அவரைச் சின்னதம்பியும் பெரியதம்பியும் வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். கவிதா வாழ்ந்த பழைய வாழ்வை மீண்டும் உருவாக்குவதே சின்னதம்பி, பெரியதம்பியின் லட்சியமாக இருக்கிறது.
ஆனால், அது நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக உள்ளது. ந்த நிலையில், தனது ஆலையில் கவிதா வேலை பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் முரளி.
பெரியதம்பியை அழைத்து, அவரைத் தனது ஆசை நாயகியாக ஆக்க விரும்புவதாகக் கூறுகிறார். ஆத்திரத்தின் உச்சத்திற்குச் செல்லும் அவர், முரளியைத் தாக்குகிறார்.
அதன் தொடர்ச்சியாக சின்னதம்பி, கவிதாவின் பணியும் பறிபோகிறது. இந்த நிலையிலும், தொடர்ந்து கவிதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடந்து வருகிறது.
ஒருநாள் பாட்டியிடம் ‘சொந்தத்துலயே கல்யாணத்தை முடிச்சுடலாம்’ என்கிறார் கவிதா. அதனைக் கேட்டதும் சின்னதம்பி, பெரியதம்பி இருவரும் ‘குத்தாட்டம்’ போடுகின்றனர்.
கவிதாவை ‘இம்ப்ரெஸ்’ செய்வதற்காகச் சில வேலைகளைச் செய்கின்றனர். இருவரில் கவிதா யாரை விரும்பினார்? ஆலை உரிமையாளர் மகன் முரளி எவ்வாறு அதற்கு இடையூறாக நின்றார்?என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
இந்த படத்தை முழுதாகப் பார்க்காதவர்களுக்குக் கூட, இதன் முடிவு என்னவென்பது நன்கு தெரியும். அதனால், அதனை மேற்கொண்டு விளக்க வேண்டியதில்லை.
இப்படத்திலுள்ள காட்சிகளை வரிசைப்படுத்தினால் சத்யராஜுக்கும்,பிரபுவுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிய வரும்.
பாடல்கள், சண்டைக்காட்சிகள், ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளுவதற்கான இடங்கள் என்று எல்லாமே சமமாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
மணிவண்ணனின் திரைக்கதை அறிவும், நட்சத்திரங்களைக் கையாளும் லாவகமும் மட்டுமே அதனைச் சாத்தியப்படுத்த துணை நிற்கின்றன.
லாஜிக் மீறல்கள் ஏராளம்
ஒப்பனையோ, கலை வடிவமைப்போ, ஒளிப்பதிவோ சினிமாத்தனத்தை வெளிப்படுத்தாதபோதும், இப்படத்தின் பல காட்சிகள் யதார்த்தத்திற்குப் புறம்பாக இருக்கும்.
அடிப்படைக் கதையே கூட பல கேள்விகளை எழுப்புவதாக இருக்கும். கதையில், நெடுநாட்கள் கழித்து நகரத்தில் இருக்கும் டி.எஸ்.ராகவேந்தர் தனது தாய் காந்திமதியைத் தேடி வந்து சந்திப்பதாக ஒரு காட்சி வரும்.
இத்தனை நாட்களாக இவர் ஏன் கிராமத்திற்கு வராமல் இருந்தார்? இவரிடம் தான் கார் இருக்கிறதே என்ற கேள்வி சாதாரண ரசிகர்களிடத்தில் எழும்.
அதேபோல, பிரபுவையும் சத்யராஜையும் அவர் ‘மாப்பிள்ளை’ என்று ராகவேந்தர் விளிக்க மாட்டார். அங்கேயும் நமக்குள் ஒரு கேள்வி முளைக்கும்.
இக்கதையில் நாயகர்கள் இருவரையும் சகோதரர்களாகக் காட்டினாலும், ஒரு காட்சியில் அவர்கள் அனாதரவற்றவர்களாக இருந்தவர்கள் என்பதை நதியாவிடம்,சத்யராஜ் பேசும் வசனத்தின் வழியே உணர்த்துவார் மணிவண்ணன்.
தொடக்கக் காட்சியொன்றில், கதையின் மைய பாத்திரங்கள் இன்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் கூடக் கிண்டலாகச் சொல்லியிருப்பார். இன்றைய சூழல் அதற்கு நிச்சயம் அனுமதிக்காது.
ராகவேந்தரும் அவரது மனைவியும் இறந்ததையோ, ஈமச்சடங்குகள் பற்றியோ திரையில் எதையும் சொல்லியிருக்க மாட்டார் இயக்குனர். அது பற்றி காந்திமதி பாத்திரத்திற்குத் தகவல் சொல்லாதது ஏன்?என்ற கேள்வியையும் தவிர்த்திருப்பார்.
இந்த படத்தில் கைம்பெண்ணாக சுதா சந்திரன் வருவார். அவரது அறிமுகக் காட்சியிலேயே அந்த உணர்வை அழகாகக் கடத்தியிருப்பார். சுதாவுக்குச் சத்யராஜ் பாத்திரம் மீது எழும் பரிதாபத்தையும் அன்பையும் கூடச் சரியாக உணர்த்தியிருப்பார்.
சுதா வரும் காட்சிகளுக்கென்று கங்கை அமரன் பிரத்யேகமாக அமைத்த பின்னணி இசை அதனைச் சாதித்திருக்கும். அதேநேரத்தில் சத்யராஜுக்கும்,சுதாவுக்கும் திருமணம் செய்வதென்று முடிவானதை கிளைமேக்ஸ் காட்சியில் காட்டியிருப்பார்.
அதற்குள் பிரபு, நதியாவுக்குத் திருமணம் நடந்து முடிந்திருக்கும். இரண்டு திருமணங்களும் ஒன்றாக நடந்தால்தானே யதார்த்தத்தோடு கொஞ்சமாவது ஒட்டிப்போகும் என்றெழும் கேள்வியை ‘அனாயாசமாக’ தாண்டியிருப்பார்.
லாஜிக்குகளை கடாசிவிட்டு, ‘ஷாட் பியூட்டிக்காக’ பல விஷயங்களைத் திரையில் புகுத்தியிருப்பார் இயக்குனர் மணிவண்ணன்.
அந்த காலகட்டத்தில் இது போன்ற ‘கிளிஷேக்கள்’ சகஜம் என்றபோதும், இப்போது அவற்றைக் கிண்டலடிக்கவே வாய்ப்புகள் அதிகம். அவற்றையெல்லாம் மீறி, இந்த படம் இன்றைய ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்.
காரணம், இதிலுள்ள தனித்துவமிக்க ரொமான்ஸ், செண்டிமெண்ட் மற்றும் காமெடி காட்சிகள். இத்தனைக்கும் இதில் நகைச்சுவைக்கென்று தனியாக நடிகர்கள் கிடையாது.
காந்திமதி, சத்யராஜ், பிரபு பாத்திரங்களே அதனைச் செய்துவிடும். ‘அன்னிக்கு என்ன பாம்பு பிரியாணியா ஆத்தா’ என்று சத்யராஜ் கேட்க, ’அதை நான் வறுத்துட்டேன்ல’ என்று காந்திமதி வெட்கப்படும் இடம் அதற்கொரு உதாரணம்.
‘ரகு தாத்தா’ காமெடி புகழ் வி.எம்.ஜானுக்கும் இதில் முக்கியப் பாத்திரம் தரப்பட்டிருக்கும்.
இதில் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளில் குழப்பங்கள் ஏதுமின்றித் திரையில் படரச் செய்த வகையில் அசத்தியிருப்பார் மணிவண்ணன்.
இந்த படத்தின் செகண்ட் கிளைமேக்ஸ், ரசிகர்களைக் குதூகலப்படுத்தி வீட்டுக்கு அனுப்புவதோடு அடுத்தநாளும் தியேட்டருக்கு வரும் விதமாக இருக்கும்.
கூடவே, சபாபதியின் ஒளிப்பதிவும், கங்கை அமரன் தந்த பாடல்களும் அதற்குக் காரணமாக இருந்தன.
கங்கை அமரனின் ஹிட் பாடல்கள்
’சின்னதம்பி பெரியதம்பி’யில் பாடல்களுக்கான சிச்சுவேஷன் எல்லாம் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கும்.உதாரணமாக, சத்யராஜ் வாங்கிவந்த நவீன ரக ஆடைகளை நதியா வேண்டாம் என்று சொல்லிவிட, சில சிறுவர்கள் தங்களது சகோதரிகளுக்காக அவற்றை எடுத்துச் செல்வார்கள்.
அடுத்த காட்சியில் மாடு மேய்க்கவும், குளத்தில் தண்ணீர் எடுக்கவும் அவ்வுடைகளோடு வரும் இளம்பெண்கள், சத்யராஜை பார்த்து ‘யாயா..யா’ என்று பாடுவார்கள்.
மாமன் மகள் திருமணம் குறித்து மது போதையில் விரக்தியுடனும் இயலாமையுடனும் சத்யராஜ், பிரபு இருவரும் மகிழ்ச்சி ததும்பப் பாடுவதாக ‘மாமன் பொண்ணுக்கு தேதி வச்சாச்சு’ பாடல் இருக்கும்.
நதியாவை நினைத்து சத்யராஜும் பிரபுவும் காதலைக் கொட்டுவதாக ‘எம் பாட்டைக் கேட்டா போதும்..’ பாடல் இருக்கும். இருவருக்கும் எஸ்.பி.பியே குரல் கொடுத்திருப்பார் என்பது இன்னொரு ஆச்சர்யம்.
’மழையின் துளியில்’ பாடலானது, அதற்கான காட்சியமைப்பில் வரும் பியானோவின் ஒலியைத் தன்னுள் நிறைத்திருக்கும்.‘ஒரு காதல் என்பது’ பாடலோ, இளையராஜாவால் இசையமைக்கப்பட்டு கங்கை அமரனுக்குத் தரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
சகோதரர்களுக்குள் இருக்கும் கொடுக்கல் வாங்கல் என்பதால் அதனை நாம் விட்டுவிடலாம். அந்த பாடலை எழுதியவர் வைரமுத்து என்பதும், இப்படம் வெளியாவதற்கு முன்னரே அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர் என்பதும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு கிளைக்கதை.
பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருப்பார் கங்கை அமரன். அதனை உள்வாங்குகையில், இளையராஜாவைச் சார்ந்து அவர் இயங்கவில்லை என்பது தெரியவரும்.
உற்சாகம் தரும் படம்
இன்றைக்கும் கூட, ‘சின்னதம்பி பெரியதம்பி’யை தற்காலச் சூழலுக்கு ஏற்பப் பொருத்தமாக ‘ரீமேக்’ செய்ய முடியும். ஆனால், அதற்குத் தற்போதைய நட்சத்திர நாயகர்கள் தயாராக இருக்க வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்தாமல், இன்னொரு நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்கும் மனநிலை வேண்டும்.
முக்கியமாக, ஒரு இயக்குனரால் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகர்களைத் தகுந்த காட்சிகளோடு சரிசமமாகத் திரையில் காட்டும் துணிவு வேண்டும். அது தற்போது இருக்கிறதா என்பது கேள்விக்குறியே!
அது போன்றதொரு உத்தரவாதத்தை ’பாலைவன ரோஜாக்கள்’ மூலமாக மணிவண்ணன் அளித்ததாலேயே, அவரால் ‘சின்னதம்பி பெரியதம்பி’யில் பிரபுவையும், சத்யராஜையும் ஒன்றிணைக்க முடிந்தது. அதுவே ‘அண்ணாநகர் முதல் தெரு’வில் பிரபுவை கவுரவ வேடத்தில் தோன்றச் செய்தது. பின்னாட்களில் ‘சிவசக்தி’யில் இருவரையும் ஒன்றிணைத்தது.
இன்று அப்படியொரு உத்தரவாதத்தைத் தரக்கூடிய இயக்குனர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தற்போது தமிழில் வெளியாகும் மிகச்சில ‘மல்டிஸ்டாரர்’ படங்கள் கூட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி சந்தையைக் குறிவைத்து அங்குள்ள நட்சத்திரங்களையே இங்கு அழைத்து வருகின்றன. இங்கிருப்பவர்களை ஒன்றாகப் பிணைக்க முயல்வதில்லை.
உண்மையைச் சொன்னால், எந்தக் காழ்ப்புணர்வும் சந்தேகங்களும் இல்லாமல் நாயகர்கள் ஒன்றாகக் கரம் கோர்த்து நடிப்பதை வரவேற்க எக்காலத்திலும் ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். ‘சின்னதம்பி பெரியதம்பி’ அதற்கொரு மிகப்பெரிய உதாரணம்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கவுண்டமணி-யோகிபாபுவின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ கதை இதுதான்!
நடப்பு நிதியாண்டில் 10000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் : பட்ஜெட்டில் அறிவிப்பு!