தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 8) துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வரும் 15ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நிலையில் மின்சாரத் துறை சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, “சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கும் பகுதிகளில், அடையாளம் காணப்பட்ட அனைத்து தாழ்வு நிலையிலான பில்லர் பாஸ்கள் (Pilar Box) தரை மட்டத்திற்கு மேல் ஒரு மீட்டர் உயரத்தில் நிறுவும் பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை சென்னை மற்றும் காஞ்சிபுர மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் மேற்கொண்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவதை உறுதி செய்ய வேண்டும்.
Pilar Box அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதை அந்தப் பகுதியை சார்ந்த செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.
ஆர்.கே.நகர் பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெளியில் தெரியும் மின் கேபிள்கள் உடனடியாக புதைக்கப்பட வேண்டும். அம்பத்தூர் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கடத்திகளை உடனடியாக உயர்த்த வேண்டும்.
தேனாம்பேட்டை பகுதியில் அடையாளம் காணப்பட்ட தாழ்வு நிலையிலான பில்லர் பாக்ஸ்கள் உயர்த்தப்பட வேண்டும்.
மயிலாப்பூர் பகுதிகளில், குடிநீர் வடிகால் பணிகளின் போது சேதமடைந்த மின் கேபிள்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் இயங்கும் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தேவைப்படும் அனைத்து தளவாடப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்வதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜே.சி.பி. கிரேன்கள் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களின் தொலைபேசி எண்களை முன்னமே கேட்டறிந்து அவைகளின் தயார்நிலை உறுதி செய்யப்பட வேண்டும்.
மின் தடங்கல் எற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள். வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
வாரிய வாகனங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். காற்றுடன் கூடிய மழையின் போது மிகத் தாழ்வான நிலையில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்க உரிய நடவடிக்கையினை போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அனைத்து அலுவலர்களும் அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் ஆஃப் செய்து வைக்கக்கூடாது.
இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழைக் காலங்களில் தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படாமல் மின்சார பணிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ள வாக்கி டாக்கி இயந்திரங்களை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.
மின் சேவைகள் மற்றும் தடை குறித்த புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
டிரைவருக்கு சம்பளம் கொடுக்க கூட வழியில்லாமல் அமிதாப் தவித்தார் – ரஜினிகாந்த் சொன்ன தகவல்கள்!
சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்… டி.ஆர்.பி ராஜா வேண்டுகோள்!