மின்வெட்டு விவாதம் : உதயநிதி – நிர்மல் குமார்- செந்தில் பாலாஜி இடையே காரசாரம்!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவை இன்று (juun 22) காலை கூடியது. அப்போது மேகதாது அணை விவகாரம், மின்வெட்டு விவகாரம் குறித்து காரசார விவாதங்கள் நடந்தன. 

இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘ முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழ்நாட்டில் தன்னுடைய பெரம்பூர் தொகுதியையே நம்பர் ஒன் தொகுதியாக மாற்றி காட்டி இருக்கிறார். எதில் தெரியுமா? 

ADVERTISEMENT

இன்று தமிழ்நாட்டிலேயே மின்வெட்டில் நம்பர் ஒன் தொகுதியாக பெரம்பூர் உள்ளது. 

ஆளும் கட்சிக்காரர்கள் என்ன பேசுகிறார்கள் தெரியுமா…. அண்ணன் பவருக்கு வந்தால் தமிழ்நாடு மாறும் என்று பார்த்தோம்… ஆனால் அண்ணன் பவருக்கு வந்த நாளிலிருந்து தமிழ்நாட்டுக்கு பவர் போய்விட்டது என்று பேசுகிறார்கள்’ என்றார்.

ADVERTISEMENT

உடனே மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் எழுந்து, ‘எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது தமிழ்நாட்டுக்கே மின்வெட்டு என்ற வகையில் பேசி இருந்தார். தமிழ்நாட்டில் எங்கெங்கு எதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று டேஷ் போர்டில் வெளியிட்டு வருகிறோம். இந்த துறை ஏன் இப்படி இருக்கிறது என்று நாங்கள் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டோம்.  

இந்தத் துறையில் மட்டும் இரண்டரை லட்சம் கோடி கடன் இருக்கிறது. அது மட்டுமல்ல இந்தத் துறையில் எந்தவித உள்கட்டமைப்பும் மேற்கொள்ளப்படவில்லை.  இது தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். 

ADVERTISEMENT

இந்தத் துறையில் காலி பணியிடங்கள் மட்டும் 70 ஆயிரம் உள்ளது.

எதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து சீர் செய்ய 125 குழுக்கல் அமைக்கப்பட்டுள்ளன. காண்ட்ராக்ட் எடுக்கப்பட்டு எங்கெங்கு மின்வெட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் சரி செய்யப்பட்டு வருகிறது. 

பெரம்பூரில் எவ்வளவு நேரம் மின்சாரம் மின்வெட்டு ஏற்படுகிறது. எங்கெங்கு ஏற்படுகிறது. எவ்வளவு நேரத்தில் சீர் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் எல்லாம் வெளியிடப்படுகின்றன. 

ஃபியூசை திருடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். சிசிடிவி இல்லாத பகுதிகளில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த பத்து நாட்களில் எங்கெங்கெல்லாம் மின்வெட்டுகள் ஏற்படுத்தப்பட்டதோ, உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு நாளைக்கு 50 முதல் 55 இடங்களிலாவது மின்வெட்டுகள் ஏற்படுகிறது. அதில் 35 இடத்திற்கு கீழ் ஒரு மணி நேரத்திற்குள் சரி செய்யப்படுகிறது. அந்த டேஷ்போர்ட்டை எதிர்க்கட்சித் தலைவர் பார்த்துவிட்டு பேசினால் நன்றாக இருக்கும்” என்று பதில் அளித்தார். 

அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை தொடர்ந்து முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் சீரான மின்விநியோகத்திற்கு 390 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் பெரும்பான்மையாக முடிக்கப்பட்டு. செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டன. 

ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் மின் தேவை ஏற்படுகிற போது, அதற்கான புது மின் உற்பத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் 90 ஆயிரம் மின்மாற்றிகள், மாற்றி சீரமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை கூடுகிற போது அதற்கான நிர்வாக ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை. 

ஒரு அரசு பொறுப்பேற்ற பிறகு அந்த துறையின் அதிகாரிகளை அழைத்து கூட்டங்களை நடத்தி, என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று களையெடுக்க வேண்டியது அரசின் கடமை. 

இப்போது இருக்கக்கூடிய பணியாளர்களை வைத்துதான் கடந்த ஐந்து ஆண்டுகளில் மின் தடையே இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டது. 

கடந்த ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் தொடங்கப்பட்டன என்பது பத்திரிகை செய்திகளில் வருகிறது. 

இதையெல்லாம் இந்த அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்றார். 

இதற்கு அமைச்சர் நிர்மல் குமார், கடந்த ஆண்டுகளில் அறிவிப்புகளை மட்டுமே செய்து இருக்கிறார்கள். எதையும் செயல்படுத்தவில்லை. அவர் நிறைய சொல்லி இருக்கிறார். அது சம்பந்தமாக இரண்டு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்’என பதில் அளித்தார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share