செய்தி தளங்கள், சமூக ஊடகங்கள் என எல்லா பகுதியிலும் பொன்னியின் செல்வன் படம் பற்றிய செய்திகள் அடர்த்தியாகப் பரவிக் கிடக்கிறது. படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பின் பொன்னியின் செல்வன் நாவல் விற்பனை சூடுபிடித்துள்ளது அதில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்களின் வீரதீர பராக்கிரமங்களைப் பற்றிய பதிவுகள் யூடியுப்பில் அதிகமாக வரத்தொடங்கியுள்ளது.
இதன் காரணமாகப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது வெளிநாட்டு வியாபாரங்கள் முழுமையாக முடிக்கப்பட்ட பின் 2.50 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடிய படத்தைத் தணிக்கை சான்றிதழ் பெற வெளிநாட்டு வினியோகஸ்தர்களுக்கு லைகா நிறுவனம் நேற்று வழங்கியுள்ளது. எல்லா உரிமைகளின் விற்பனை முடிந்துவிட்டாலும் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடப் போவது யார் என்கிற கேள்வி திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் உட்படப் பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபார வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தப்படத்தின் தெலுங்குப் பதிப்பைத் தெலுங்கின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான தில்ராஜு வெளியிடவிருக்கிறார். கேரளாவில் இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கர்நாடகாவில் கே.செந்தில் இப்படத்தை வெளியிடுகிறார்
பொதுவாகத் தமிழ்ப்படங்களின் வெளிநாட்டு உரிமை யாராவது ஒருவரிடம் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் பிரித்துக் கொடுப்பார்கள்.
இந்தப்படத்தை லைகா நிறுவனமே ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக விற்பனை செய்திருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் படத்தை வெளியிடும் உரிமையை வன்சன்மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. மலேசிய உரிமையை லோட்ட்ஸ் ஃபைவ்ஸ்டார் நிறுவனம் பெற்றிருக்கிறது.
சிங்கப்பூர் உரிமையை ஹோம் ஸ்கிரின் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அமெரிக்க உரிமையை சரிகம நிறுவனம் பெற்றிருக்கிறது. கனடா உரிமையை கேடபிள்யூ டாக்கீஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இலண்டன் மற்றும் ஃபிரான்ஸ் உரிமை நைட் ஈடி ஃபிலிம்ஸ் என்கிற நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஐரோப்பா உரிமையை போலின் சினிமா என்கிற நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள். மிடில் ஈஸ்ட் எனப்படும் மத்திய கிழக்கு நாடுகளின் உரிமையை பார்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.
ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் வெளியிடும் உரிமை சினிஃபிளிக்ஸ் என்கிற நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள். இலங்கையில் முதன்முறையாக லைகா நிறுவனம் நேரடியாக இப்படத்தை வெளியிடுகிறது. இவை எல்லாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை.

இன்னும் தமிழ்நாடு திரையரங்குகள் வெளியீடு யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்குப் படத்தைக் கொடுக்கக் கூடாது என்று தொடக்கம் முதல் இயக்குநர் மணிரத்னம் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
ஆனால், எல்லோரும் எதிர்பார்த்ததைப் போலத் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுப்பது என்று லைகா நிறுவனம் முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 29 அன்று கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் வெளியாக உள்ளது, திருச்சிற்றம்பலத்தின் வெற்றி இந்த படத்திற்கு உதவும் என்பதால் அதிகமான திரைகளில் படத்தைத் திரையிட கலைப்புலி தாணு முயற்சி எடுத்துவருகிறார் அந்தப் போட்டியைச் சமாளிக்கத் தமிழ்நாடு விநியோக உரிமையை நேரடியாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பெயரிலோ அல்லது அதன் சகோதர நிறுவனமான எம் எஸ் எம் நிறுவனத்தின் பெயரிலோ வெளியிட லைகா நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இராமானுஜம்
