முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கரூர் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
குறிப்பாக அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த போது வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளன.
இந்த வழக்கில் ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தார்.
இவர் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது மின்மாற்றிக் கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட புகாரில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐயும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கும் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு இன்று (ஜூன் 20) கரூர் போலீசார் வந்துள்ளனர்.
ஆனால் எதற்காக போலீசார் வந்து விசாரணை செய்து சென்றனர் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ‘உத்தமர் செந்தில் பாலாஜி பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார். அவர் மீது 10 வருடங்களாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. எந்த வழக்கு என்னவென்று விவரம் தெரியவில்லை. அந்தந்த துறைகளுக்கு தான் தெரியும்’ என்று கூறினார்.
