பெண்களுக்காக 100 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் போராடினார் என்று திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி தமிழில் பேசினார் .
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு இன்று (அக்டோபர் 14) திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “32 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இருள் சூழந்த நாளில் நான் தமிழ்நாட்டில் கால்வைத்தேன். என்னுடைய தந்தையின் அஸ்தியை பெற்றுக்கொள்வதற்காக இங்கு வந்தேன்.
அப்போது எனக்கு 19 வயது. விமானத்தின் கதவு திறந்ததும் இரவு எங்களை சூழ்ந்திருந்தது. ஏனென்றால் நான் எப்போதும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒரு நிகழ்வு நடந்திருந்தது. சில மணி நேரங்களுக்கு முன்னதாக எனது தந்தை கொல்லப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கியதும், நீல நிற உடை அணிந்திருந்த அங்கு பணிபுரியும் பெண்கள் என் அம்மாவை அவர்களது தோளில் தாங்கிப்பிடித்துக் கொண்டு அவரை சமாதனப்படுத்த முடியாமல் அழுதனர்.
பெண்கள் துயரத்தை பகிர்ந்துகொண்ட அந்த நாளில் எனக்கும் தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் இடையே ஒரு பிணைப்பு உருவானது,
நீங்கள் தான் என் தாய், நீங்கள் தான் என் சகோதரி. இங்கே உங்களுடன் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இன்று நான் இவரை பற்றி பேசப்போகிறேன். இந்திய நாட்டின் பெண்களை பற்றி பேசப் போகிறேன்” என்று தமிழில் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்களே இந்தியாவின் தூண்கள். பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். பெண்களை மையமாக வைத்து தான் குடும்பம் என்பது கட்டமைக்கப்படுகிறது.
இன்றும் பெண்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
தந்தை பெரியார் பற்றி பேசிய பிரியங்கா காந்தி, “100 ஆண்டுகளுக்கு முன்னால் தந்தை பெரியார் பெண் ஏன் அடிமையானாள்? என்று பெண்களுக்காக குரல் கொடுத்தவர். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதை எதிர்த்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பெரியார் வழியில் அண்ணாவும், கலைஞரும் பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள்.
சமூக மாற்றத்திற்கான புரட்சி தமிழ்நாட்டில் தான் உருவானது. நாம் முழுமையாக சமத்துவத்தை பெற இன்னும் உழைத்தாக வேண்டும். பெரியார் கேள்வி எழுப்பி 100 ஆண்டுகளுக்கு பின்னும் பெண் அடிமைத்தனம் இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசிய பிரியங்கா காந்தி, “அரசியலில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை அதிகமாக்க வேண்டும்.
அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களின் சகிப்புத் தன்மையை புகழ்ந்து பேசுவதை நிறுத்த வேண்டும். மக்கள் தொகையில் சரிக்கு சமமாக இருக்கும் பெண்கள் ஓன்று திரண்டால் எந்த சக்தியும் அதற்கு எதிராக நிற்காது.
மாற்றத்திற்கான சரியான இடத்தில் நாம் இங்கு நின்று கொண்டிருக்கிறோம். கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடுவதற்காக நாம் இங்கு திரண்டுள்ளோம்” என்றார் பிரியங்கா காந்தி.
