பாஜக ஆட்சியில் எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை: கனிமொழி

அரசியல்

குடியரசுத் தலைவர் முதல் சாமானிய பெண்கள் வரை யாருக்கும் பாஜக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார் திமுக துணைபொதுச் செயலாளர் கனிமொழி.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு திமுக மகளிர் அணி மாநாடு இன்று (அக்டோபர் 14) நடைபெற்று வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, “ பெண்களுக்கு ஆண்தான் பாதுகாப்பு என்பார்கள். ஆனால் இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறையில் பெண்களுக்கு வாய்ப்பளித்து ஆண்களுக்கு பெண்களால் பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் கலைஞர்.
திமுக அரசு தொடர்ந்து பெண்களை பேணி காக்க கூடிய அரசாக உள்ளது” என்று தெரிவித்தார்

தொடர்ந்து பெண்களுக்கான இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் ஆகியவை குறித்து பேசிய கனிமொழி, “பிரதமர் எப்போதும் பெண் சக்தியை பற்றி பேசுவார். மகளிருக்கான மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.

2010ஆம் ஆண்டு யுபிஏ ஆட்சியில் சோனியா காந்தி வலியுறுத்தலின் பேரில் மகளிர் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது.

ஆனால் தற்போது மகளிர் மசோதாவை கொண்டு வந்துவிட்டதாக பாஜக மார்தட்டிக் கொள்கிறது.  அந்த மசோதா 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வரமுடியாத மசோதாவாக உள்ளது.

தேர்தலுக்காக பெண்களை ஏமாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.

மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 50 ஆயிரம் பேருக்கு மேல் முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் உள்ளனர். சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.

குஜராத்தில் பாஜக செய்த அட்டூழியங்களால் பெண்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டார்கள் என்பதை மறந்துவிட முடியாது. மதக் கலவரங்கள், வெறுப்பு அரசியல் என்று வரும்போது பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நாட்டின் முதல் குடிமகள் என்று சொல்லக் கூடியவர் குடியரசுத் தலைவர், அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்ற ஒரே காரணத்துக்காக நாடாளுமன்றத்துக்குள் வர முடியாத வகையில் அவமானப்படுத்தக் கூடிய ஒரு நிலை இந்த நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இருந்த ஒரு பெண் அமைச்சர் ராஜினாமா கடிதம் அளிக்கக் கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில் நான் ஒரு பெண், தலித் என்பதால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் விளையாட்டு வீராங்கனைகள் தங்களுடைய நியாயத்துக்காக போராடினார்கள். ஆனால் பாஜக ஆட்சியில் அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

குடியரசுத் தலைவர் முதல் சாமானிய பெண் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலையை தான் பாஜக ஆட்சி உருவாக்கி தந்திருக்கிறது” என்றார்.

“2016 – 2017ல் 15 சதவிகித பெண்கள் வேலைக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. இது 8 சதவிகிதமாக குறைந்துள்ளது. பெண்கள் ஒதுக்கப்படுவது நீடித்துக்கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

’மகளிர் இட ஒதுக்கீடு… உத்தரவாதம் இல்லை’: உரிமை மாநாட்டில் தலைவர்கள் பேச்சு!

’மகளிர் இட ஒதுக்கீடு… உத்தரவாதம் இல்லை’: உரிமை மாநாட்டில் தலைவர்கள் பேச்சு!

INDvsPAK: ஆக்ரோசம் காட்டிய இந்தியா… ஆல் அவுட்டான பாகிஸ்தான்!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *