தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் : முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழ் வணக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Periyar

தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பதிவில், “சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

ADVERTISEMENT

தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!

தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்!
வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்!”என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பெரியார் பிறந்த நாளில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்,”தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!

பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.

ADVERTISEMENT

ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.

பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.

ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!

வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.

“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.

பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!” என தெரிவித்துள்ளார்.

திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் பதிவில், “பெரியாரைப் படிப்போம்; அவர் விதைத்த சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்; நாளைய உலகை பகுத்தறிவும் சமத்துவமும் நிறைந்த உலகாகப் படைப்போம்!” என வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “ஆயிரம் ஆண்டுகளாக வேரூன்றியிருந்த சாதிய ஆதிக்கத்தையும்,
சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து, சுயமரியாதை- பகுத்தறிவு- சமத்துவம்- சமூகநீதி எனும் நான்கு தூண்களின் மீது புதிய எழுச்சிமிகு சமூகத்தைக் கட்டமைக்கப் போராடியவர் தந்தைப் பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

அவரது போராட்டம் ஒரு தனிமனிதருக்கு எதிரானதல்ல; ஆதிக்கத்திற்கு எதிரானது.
அவரது குரல் ஒரு காலத்திற்கானதல்ல; சமத்துவம் நிலைநாட்டப்படும் வரை தொடர வேண்டிய குரல்.

“பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை; மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும்” என்ற சமூகநீதிப் பாதையைத் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமாகப் பதித்த பெரியாரின் வழியில் என்றும் நடந்திட உறுதியேற்போம்.” என பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், ‘தந்தை பெரியாரின் 148-ஆம் பிறந்தநாளில் அவர் கனவு கண்ட 100% வகுப்புவாரி இடப்பங்கீட்டை வென்றெடுப்பதற்காக போராட உறுதியேற்போம்!

பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 148-ஆம் பிறந்தநாள் இன்று உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தந்தைப் பெரியாரை வணங்கி போற்றுகிறேன்.

தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, போராட்டங்களை நடத்தி, வென்றெடுத்துக் காட்டியவர் தந்தைப் பெரியார். அவரது அந்த உறுதி தான், தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக மோசமான நிலையில் இருந்த வன்னிய மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டத்தை 39 ஆண்டுகளுக்கு முன் அவரது பிறந்தநாளில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் 100% வகுப்புவாரி இடப்பங்கீட்டை வழங்க வேண்டும் என்பது தான் தந்தைப் பெரியாரின் கனவு. அது தான் பாட்டாளி மக்களின் இலட்சியம். பெரியாரின் கனவை நனவாக்கவும், பாட்டாளி மக்கள் கட்சியின் இலட்சியத்தை வென்றெடுக்கவும் போராடுவதற்கு இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!” என தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “சாதி ஆதிக்கம், மூடநம்பிக்கை, ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த புரட்சியாளரும், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி ஆகிய சிந்தனைகளை மக்கள் மனங்களில் ஆழமாக விதைத்த மாபெரும் சீர்திருத்தவாதியுமான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

அறிவை ஆயுதமாகக் கொண்டு அநீதிகளை எதிர்த்து, சமத்துவமும் சுயமரியாதையும் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தனது வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை செயல்படுத்த, அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share