திராவிட முன்னேற்றக்கழகம் இன்று (செப்டம்பர் 17) 78ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுகுறித்து திமுகவின் எக்ஸ் தளத்தில், “ஆரியத்தின் ஆணவப்பிடியாலும் மூடநம்பிக்கையின் முற்றுகையாலும் சிதைக்கப்பட்ட திராவிட இனத்திற்குப் புதுவாழ்வு தந்திட, கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்ட நாள் இன்று!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் பதிவில், “மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து
மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பேரறிஞர் அண்ணா விதைத்து – தலைவர் கலைஞர் வளர்த்து – நாம் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர்ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்!
மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி – சுயமரியாதை –
தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்! பயணத்தில் வெல்வோம்!” என தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் பதிவில், “தமிழினத்தின் உரிமைக் குரலாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகம், கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை.
“ஆட்சி வரும், போகும்; அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!” என்ற தலைவர் கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கைப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்.” என தெரிவித்துள்ளார்.
