பள்ளிக்கரணையில் கொழுந்துவிட்டு எரியும் தீ.. 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Fire

பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கின் அருகே ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, சென்னை மாநகராட்சியின் 14-வது மண்டல அதிகாரிகள் பல்வேறு விதிமீறல்களுக்காகப் பறிமுதல் செய்து, அபராதம் விதித்த பழைய வாகனங்கள் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று காலை அந்த குப்பை கிடங்கில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. குப்பை கிடங்கின் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், தீ அடுத்தடுத்து அனைத்து வாகனங்களுக்கும் மிக வேகமாகப் பரவி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் விண்ணை முட்டும் அளவிற்குப் பயங்கரமான கரும் புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது.

இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அந்தச் சாலையைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால், அப்பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தத் தீ விபத்தின் காரணமாகச் சாலைகளில் கரும் புகை மூட்டம் அடர்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் விளைவாக, மேடவாக்கத்திலிருந்து வேளச்சேரி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share